தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானை வணங்கி தொடங்கும் செயல்கள் அனைத்தும் வெற்றியடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. அதற்காகவே, சஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம் என முருகனுக்காக விரத நாட்கள் இருக்கின்றன. இந்த நாட்களில் விரதம் இருக்க முடியாதவர்கள், சக்தி வாய்ந்த 48 நாள் விரதத்தை கடைபிடித்தால் நினைத்து நடக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், முருகனுக்கு 48 நாள் விரதம் இருக்கும் வழிமுறைகள் என்ன? கடைப்பிடிக்க வேண்டியவை என்னென்ன? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
விரதம் துவங்கும் முறை: முருகனுக்கு உகந்த தினங்களான செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விரதத்தை துவங்கலாம். இல்லையென்றால், மாதத்திற்கு இரண்டு முறை வரும் சஷ்டி திதியான வளர்பிறை சஷ்டி அல்லது தேய்பிறை சஷ்டியில் விரதத்தை கடைபிடிக்க தொடங்கலாம்.
வாழ்க்கையில் செல்வம், வளர்ச்சி வேண்டுபவர்கள் வளர்பிறை சஷ்டியிலும், கடன், துன்பம் என பிரச்சனைகள் நீங்க வேண்டும் என நினைப்பவர்கள் தேய்பிறை சஷ்டியில் விரதத்தை ஆரம்பிக்கலாம். முருகனுக்கு விஷாசமான கார்த்திகை, விசாகம், பூசம் நட்சத்திர தினங்களிலும் விரதத்தை கடைபிடிக்க தொடங்கலாம்.
விரதத்தின் முதல் நாள் கடைபிடிக்க வேண்டியது?: விரதம் தொடங்கும் நாளில், வீட்டிற்கு அருகாமையில் உள்ள கோயிலுக்கு சென்று எதை வேண்டி விரதம் இருக்க போகிறீர்களோ அதனை முருகனிடம் சொல்லி வழிபட வேண்டும். அருகில் கோயில் இல்லை என சொல்பவர்கள், வீட்டில் முருகனின் திருவுருவப்படத்தை வைத்து, மஞ்சள் அல்லது சிவப்பு நிற பூக்களால் அலங்கரிக்கவும். பின், பாலில் தேன் கலந்து முருகனுக்கு நெய்வேத்தியம் படைக்கலாம்.
எந்த பதிகம் படிக்கலாம்?:வாழ்க்கையில் கஷ்டம் , எந்த முன்னேற்றமும் இல்லை என நினைப்பவர்கள் கந்த சஷ்டி கவசம் படிக்கலாம். நோய் நீங்குவதற்கு சண்மூக கவசம், குழந்தை, சொந்த வீடு வேண்டி விரதம் இருப்பவர்கள் திருப்புகழ் பாராயணம் செய்யலாம்.
விரதம் இருக்கும் வழிமுறை: 48 நாட்களும் எதாவது ஒரு வேளை சாப்பிடாமல் விரதத்தை கடைபிடிக்கலாம். காலையில் விரதம் இருக்க நினைப்பவர்கள், முருகனுக்கு படைத்த நெய்வேத்தியத்தை சாப்பிட்டு விரதத்தை துவங்கலாம். இரவு விரதத்தை கடைபிடிக்க நினைப்பவர்கள், பால் அல்லது பழம் சாப்பிட்டுக்கொள்ளலாம். உடல்நிலை சரியில்லாதவர்கள், மூன்று வேளையும் சைவ உணவு சாப்பிடலாம்.
ஷட்கோண தீபம்: காலை மற்றும் மாலையில், வீட்டில் உள்ள முருகனின் திருவுருவப்படத்திற்கு முன் ஷட்கோண தீபம் ஏற்றி, 108 முறை 'ஓம் சரவண பவ' எனும் முருகனின் மந்திரத்தை சொல்லுங்கள்.