இந்தாண்டிற்கான மகா கந்த சஷ்டி விரதம், நவம்பர் 2 சனிக்கிழமை தொடங்கி, நவம்பர் 7ம் தேதி சூரசம்ஹாரம் வரை தொடர்கிறது. மறுநாளான, நவம்பர் 8ம் தேதி காலை திருக்கல்யாணம் நடைபெறும். விரதம் இருப்பவர்கள் சிலர், 6வது நாள் சூரசம்ஹாரம் முடிந்தவுடன் விரதத்தை முடித்துக்கொள்வார்கள். சிலர், மறுநாள் காலை திருக்கல்யாணத்தை பார்த்த பின் விரதத்தை முடிப்பார்கள்.
எப்போது, விரதத்தை முடித்தாலும், சஷ்டி விரதத்தை முடிப்பதற்கென சில முறைகள் இருக்கின்றன. அந்த வகையில், விரதத்தை முடிக்கும் போது இந்த 3 விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. அவை என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ளலாம்..
- முருகனுக்கு நெய்வேத்தியம்: விரதத்தின் கடைசி நாளில், முருகனுக்கு நெய்வேத்தியம் படைத்து விரதத்தை முடிப்பது மிகவும் நல்லது. அந்த நெய்வேத்தியத்தில், பால் சமபந்தப்பட்ட ஒரு உணவும், இனிப்பு சம்பந்தப்பட்ட ஒரு உணவும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதே ஐதீகமாக இருக்கிறது.
உதாரணத்திற்கு, தயிர் சாதம் மற்றும் சர்க்கரை பொங்கல் செய்து முருகனுக்கு படைக்கலாம். இல்லையென்றால், தயிர் சாதத்துடன் பாயாசம் அல்லது ஒரு இனிப்பு பலகாரம் வைக்கலாம். முருகனுக்கு நெய்வேத்தியம் படைக்கும் போது, அதன் கூடவே விரதத்தை முடிப்பதற்கு என வீட்டில் சாம்பார், பொறியல் என எது செய்தாலும் அதையும் முருகன் முன் வைத்து விரதத்தை முடித்துக்கொள்ளலாம்.
- 6 விளக்குகள் முக்கியம்: விரதத்தை முடிக்கும் போது, முருகனின் படத்திற்கு முன் சர்க்கோண கோலம் எனப்படும் கோலத்தை வரைந்து, அதில் 6 விளக்குகளை ஏற்றி வழிபட வேண்டும். (கீழே கொடுக்கப்பட்டுள்ள கோலத்தை வரைந்து 6 மூலைகளிலும் விளக்குகளை ஏற்ற வேண்டும்).
இல்லையென்றால், முருகன் படத்திற்கு முன், வரிசையாக 6 விளக்குகளை வைத்தாலும் சரி. 6 விளக்கு என்பது 6 நாள் நடக்கும் சஷ்டி விரதம், ஆறு படை வீடு, சரவணபவ வார்த்தையில் இருக்கும் 6 எழுத்துகளை குறிப்பதோடு முருகனுக்கு மிகவும் விசேஷமானது எனவும் கூறப்படுகிறது. நீங்கள் ஏற்றும் விளக்கு நெய் விளக்காக இருந்தால் கூடுதல் சிறப்பு. கோலத்தில் ஓம்-ஐ சுற்றியுள்ள வார்த்தைகளில் விளக்கை ஏற்ற வேண்டும்.
- 108 முறை 'சரவணபவ': விரதத்தை முடிக்கும் போது 'ஓம் சரவணபவ' எனும் ஸ்லோகத்தை 108 முறை சொல்லி விரதத்தை முடிக்க வேண்டும். முருகனுக்கு சொல்லக்கூடிய, போற்றக்கூடிய மிக முக்கியமான ஸ்லோகம் தான் 'ஓம் சரவணபவ'. இது மிகவும் சக்தி வாய்ந்த ஸ்லோகமாக நம்பப்படுகிறது.