குழந்தையின் எதிர்காலத்தை வடிவமைப்பது மற்றும் சரியான வாழ்க்கை பாதையில் பயணிக்க வைப்பதில் பெற்றோரின் பங்கு மிகவும் முக்கியமானது. பெற்றோரின் வளர்ப்பிலேயே குழந்தையின் புத்திசாலித்தனம் வெளிப்படுகிறது. அனைவரும் சிறந்த பெற்றோராக இருக்க தான் நினைக்கிறோம். ஆனால், சில நேரங்களில் இந்த சிந்தனை, அவர்களை அறியமாலேயே குழந்தைகள் மீது தேவையற்ற அழுத்தங்களை திணிக்க வைக்கிறது.
சில விஷயங்கள் குழந்தை வளர்ப்புக்கு அவசியமானதாக இருந்தாலும், குழந்தைகளின் விருப்பம் இல்லாமல் அவற்றை செய்ய கட்டாயப்படுத்துவது எதிர்மறையான விளைவுகளுக்கு வழிவகுக்கின்றது. இந்நிலையில், குழந்தைகள் மீது திணிக்கக்கூடாத மற்றும் கட்டாயப்படுத்தக்கூடாத விஷயங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- பசி இல்லாவிட்டாலும் சாப்பிடக் கட்டாயப்படுத்துவது: பெற்றோர்கள் தங்கள் குழந்தை சரியாக சாப்பிடுவதில்லை, ஊட்டச்சத்துமிக்க உணவுகளை விரும்புவத்தில்லை என்று கவலைப்படுகிறார்கள். அதனால், கட்டாயப்படுத்தி சாப்பிட வைக்கிறார்கள். குழந்தைக்கு பசி இல்லாதபோது அவர்களை சாப்பிட வைப்பது ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கத்திற்கு வழிவகுக்கும்.
இதனால், இயற்கையான பசி உணர்வு நீங்குவதோடு உடல் பருமன் போன்ற பிரச்சனைக்கும் வழிவகுக்கும். சத்தான உணவுகளை சாப்பிட மறுத்தால், அவர்கள் முன் நீங்கள் அந்த உணவை ரசித்து சாப்பிடுங்கள். உங்களை பார்த்து உங்கள் குழந்தையும் சத்தான உணவு சாப்பிட தொடங்குவார்கள். உணவு தரும் நன்மைகளை எடுத்துக்கூறுங்கள். தட்டில் உள்ள அனைத்தையும் சாப்பிட கட்டாயப்படுத்தாமல், கவனத்துடன் சாப்பிடக் கற்றுக்கொடுங்கள்.
- எல்லோருடனும் நண்பர்களாக இருக்க அறிவுறுத்துவது: கருணை மற்றும் அனைவரையும் அனுசரித்து செல்ல வேண்டும் என பெற்றோர்கள் ஊக்குவிப்பது இயல்பானது, ஆனால் குழந்தைகளை எல்லோருடனும் நண்பர்களாக இருக்க கட்டாயப்படுத்துவது எதிர் விளைவை ஏற்படுத்தும். பெரியவர்களைப் போலவே குழந்தைகளுக்கும் தனிப்பட்ட விருப்பத்தேர்வுகள் மற்றும் அவர்கள் யாரைச் சுற்றி பாதுகாப்பாக உணர்கிறார்கள் என்பது குறித்த உள்ளுணர்வு இருக்கும்.
நட்பை கட்டாயப்படுத்துவது அவர்களின் உள்ளுணர்வுகளைப் புறக்கணிக்கவும், ஆரோக்கியமற்ற உறவுகளை பொறுத்துக்கொள்ளவும் வழிவகுக்கும். அவர்களை கட்டாயப்படுத்துவதற்கு பதிலாக, குழந்தைகள் அனைவரிடமும் மரியாதையாக இருக்க கற்றுக்கொடுங்கள். மேலும், குழந்தைகள் உண்மையிலேயே யாருடன் தொடர்பு கொள்கிறார்கள் என்பதிலும் கவனமாக இருங்கள்.
இதையும் படிங்க:குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவது இவ்வளவு ஈஸியா? பெற்றோர்களே இது உங்களுக்கு தான்! |
- பொருட்களை பகிர்ந்து கொள்ள கட்டாயப்படுத்துவது: பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஊக்குவிப்பது நல்லது. ஆனால், குழந்தைகளுக்கு விருப்பமான விளையாட்டு பொருட்கள் மற்றும் பிறவற்றை மற்றவர்களுக்கு பகிர்ந்து அளிக்குமாறு கட்டாயப்படுத்துவது தவறு.
இந்த செயல், அவர்களது சொந்த உடைமைகள் மீது உரிமை இல்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.மேலும், விரக்தியை ஏற்படுத்தும். கொடுத்து பழகுவதை கட்டாயப்படுத்துவதற்கு பதிலாக, தாராள மனப்பான்மையுடன் கொடுக்கும் எண்ணம் எழ வேண்டும். கருணைக்கும் தனிப்பட்ட எல்லைகளுக்கும் இடையிலான வேறுபாட்டைக் குழந்தைகள் புரிந்து அதன் படி நடக்க உதவுங்கள்.
- சுதந்தரமாக செயல்படுவதை தடுப்பது:குழந்தைகள் சரியான பாதையை தேர்ந்தெடுத்து பயணிப்பதற்கு பெற்றோர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களின் செயல்பாடுகளில் எப்போதும் குறிக்கீடு செய்யக்கூடாது. அவர்கள் செல்லும் பாதை தவறு என்றால், அவர்களின் போக்கில் சென்று திருத்த முயற்சிக்கவும்.