கார்த்திகை மாதம் என்றதுமே அனைவரது நினைவிற்கு வருவது, சபரிமலை ஐயப்பனும் மாலை அணிவதும் தான். இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள், ஐயப்பனுக்காக மாலை அணிந்து பக்தியுடன் ஐயப்பன் நாமத்தை சொல்லி கடுமையான விரதம் அனுசரிப்பார்கள். இப்படி, மாலை அணிபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விரதமுறைகள் இருக்கின்றது. அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..
- சபரிமலை செல்ல விரும்புபவர்கள், கார்த்திகை மாதம் முதல் நாள் அல்லது கார்த்திகை 19ம் தேதிக்குள், ஒரு நாளில் மாலை அணிய வேண்டும். கார்த்திகை முதல் நாளில் மாலை அணிபவர்கள் நல்ல நாள் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அதற்குப் பின் அணிபவர்கள், நல்ல நாள் பார்க்க வேண்டும். குறைந்தது 41 நாட்கள் விரதமிருக்க வேண்டும்.
- துளசி மணி 108 கொண்டது அல்லது 54 ருத்திராட்சை கொண்ட மாலை வாங்கி ஐயப்பன் திருவுருவம் பதித்த டாலர் ஒன்றையும் அதனுடன் இணைத்து அணிய வேண்டும்.
- கோயிலில் பூஜை செய்து குருசாமி ஒருவரது கையால் மாலை அணிந்து கொள்ளலாம். இல்லையென்றால், தாயிடன் ஆசிர்வாதம் வாங்கி அவர்களது கையால் மாலையை அணிந்து கொள்ளலாம்.மாலை அணிந்த பின், கோபதாபம், குரோதம், விரோதம் கொள்ளக்கூடாது. அனைவரிடமும் சிநேகம் பாராட்டி பணிவுடன் பழக வேண்டும்.
- காலையில் சூரிய உதயத்துக்கு முன்புன், மாலையிலும் குளிர்ந்த நீரில் நீராடி ஐயப்பனை மனதார நினைத்து வணங்க வேண்டும். கருப்பு, நீலம், காவி, பச்சை நிறவேட்டி மற்றும் சட்டை மட்டுமே அணிய வேண்டும். மேலும், பிரம்மச்சரிய விரதத்தை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
- சபரிமலைக்கு சென்று வந்த பின்னரே மாலையை கழற்ற வேண்டும். ரத்த சம்பந்தமுள்ளவர்களின் மரணம் ஏற்பட்டால், அந்த துக்கத்தில் கலந்து கொள்வதற்கு முன் குருசாமியிடம் சென்று மாலையை கழற்றி விட்டு பங்கேற்க வேண்டும்.
- ஏதோ ஒரு காரணத்தால் மாலையை கழற்ற நேர்ந்தால் அந்தாண்டு சபரிமலைக்கு செல்ல வேண்டாம். குழந்தை பிறந்த வீட்டிற்கோ மற்றும் பெண்களின் சடங்கு வைபவத்துக்கோ செல்லக்கூடாது.
- மது, மாமிசம், புகைபிடித்தலை விட்டு விட வேண்டும். மாலை அணிந்த பக்தர்களின் வீட்டில் சாப்பிடலாம். மற்றவர்கள் வீட்டில் பால், பழம் மட்டுமே சாப்பிடலாம். மாலை போட்ட நாளிலிருந்து விரதத்தை முடிக்கும் வரை முடிவெட்டுதல், சவரம் செய்து கொள்ளுதல் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
- தரையில் ஜமுக்காள்ம் ஒன்றை விரித்துப் படுக்க வேண்டும்.மெத்தை, தலையாணை பயன்படுத்தக்கூடாது. மற்றவர்களின் சாந்தமாகப் பழக வேண்டும். பிறர் மனம் புண்படும் படி பேசக்கூடாது. அதே போல, பேச்சை குறைத்து மவுனத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
- விரத சமயத்தில் மாலை அணிந்தவர்களுக்கு துன்பங்கள் ஏற்படும் என்பதும், சோதனைகளுக்கு உள்ளாவார்கள் என்பது தவறான கருத்துக்கள். கன்னிச் சாமிகள் தங்களின் வசதிக்கேற்ப வீடுகளில் பூஜைகள் நடத்தி ஐயப்பன்மார்களுக்கும் மற்றவர்களுக்கும் அன்னதானம் வழங்கலாம்.
- ஒருவேளை, கழுத்தில் அணிந்திருக்கின்ற மாலை தவறுதலாக அறுந்துபோக நேரிட்டால், அதை சரிசெய்து அணிந்துகொள்ளலாம். மாலை அறுந்துவிட்டதே என்ற மன சஞ்சலம் அடைய தேவையில்லை.
- மற்றவர்களிடம் பேசும்பொழுது சாமி சரணம் எனத் தொடங்கி, விடைபெறும் பொழுது சாமி சரணம் எனக் கூற வேண்டும். இருமுடிக்கட்டு பூஜை குருசாமி இடத்திலோ, கோவில்களிலோ அல்லது வீட்டிலோ வைத்து நடத்த வேண்டும்.
- சபரிமலைப் பயணம் புறப்படுகையில் யாரிடமும் போய் வருகிறேன் எனக் கூறக்கூடாது. பம்பை நதியில் நீராடும் பொழுது மறைந்த தமது முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு ஈமக்கடன்களைச் செய்து நீராட வேண்டும்.
- யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும், ஐயப்பனின் அருள் பிரசாதக் கட்டினை தலையில் ஏந்தியபடியே வீட்டு வாசல் படியில் விடலைத் தேங்காய் அடித்து வீட்டினுள் நுழைய வேண்டும்.வீட்டில் பூஜை அறையில் பூஜை செய்து, கட்டினைப் பிரித்து பிரசாதங்களை விநியோகம் செய்ய வேண்டும்.
- மாலையை கழற்றும் போது, குருசாமி சொல்லும் மந்திரத்தை கூறி மாலையைக் சந்தனத்தில் நனைத்து ஐயப்பன் திருவுருவப் படத்திற்கு முன்னால் வைக்க வேண்டும். பின்னர், தீபாராதனை காட்டி விரதத்தை முடிக்க வேண்டும். குருசாமி இல்லை என்றால் தாயார் முன்னிலையில் மாலையை கழற்றலாம்.
இதையும் படிங்க: |