டோக்கியோ: ஜப்பானில் செவ்வாய்க்கிழமை காலை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால் அந்நாட்டின் தீவுப் பகுதிகளை சிறிய அளவிலான சுனாமி அலைகள் தாக்கின.
எனினும் கடற்கரை பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்படவில்லை. சுனாமி எச்சரிக்கை சுமார் 3 மணி நேரத்துக்குப் பின்னர் திரும்பப் பெறப்பட்டது. சிறிய அளவிலான சுனாமியாக இருந்ததால் அதிர்ஷ்டவசமாக பொருட்சேதமோ, உயிர்சேதமோ ஏற்படவில்லை.
இசு தீவுகளில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இசு மற்றும் ஒகசவாரா தீவுகளின் கடற்கரைகளில் கடல் அலை 1 மீட்டர் (யார்ட்) உயரத்துக்கு ஏற்படக்கூடும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. அதே நேரத்தில், ஜப்பான் நிலநடுக்கம் குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின், ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது.
இசு தீவுகளில் சுமார் 21,500 பேரும், ஒகசவாரா தீவுகளில் சுமார் 2,500 பேரும் வசிக்கின்றனர். நிலநடுக்கம் ஏற்பட்ட 30 நிமிடங்களுக்குப் பிறகு, ஹச்சிஜோ தீவில் உள்ள யேனே மாவட்டத்தில் சுமார் 50 செ.மீ. (சுமார் 20 அங்குலம்) உயரத்துக்கு சுனாமி கண்டறியப்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கொசுஷிமா, மியாகேஜிமா மற்றும் இசு ஓஷிமா ஆகிய மூன்று தீவுகளிலும் சிறிய அலைகள் கண்டறியப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: உக்ரைனில் அமைதி திரும்ப நடவடிக்கை; நியூயார்க்கில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த ஜெலென்ஸ்கி!
டோக்கியோவுக்கு தெற்கே சுமார் 300 கி.மீ. (186 மைல்) தொலைவிலும், ஹச்சிஜோ தீவுக்கு தெற்கே 180 கிலோமீட்டர் (111 மைல்) தொலைவிலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹச்சிஜோ தீவில் அலைகள் ஆக்ரோஷமாக இருந்ததை உள்ளூர் செய்தி தொலைக்காட்சிகள் காண்பித்தன. எனினும் இதனால் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
உலக அளவில் மிக அதிகமாக பூகம்பம் மற்றும் சுனாமி பாதிப்புக்குள்ளாகும் நாடுகளில் ஜப்பானும் ஒன்றாகும்.