டமாஸ்கஸ் (சிரியா):மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவில் ஆட்சியாளர்களுக்கு எதிராக கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர். இந்த போரில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கிளர்ச்சியாளர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் சிரியாவின் இரண்டாவது பெரிய நகரான அலெப்போ, முக்கிய நகரான ஹமா ஆகிய நகரங்களை அவர்கள் கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து இன்று தலைநகர் டமாஸ்கசை கைப்பற்றியுள்ளனர். இதன் மூலம் சிரியாவில் 13 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் சிரியாவில் வாழும் இந்திய மக்களை பாதுகாக்கும் பொருட்டு, டமாஸ்கஸில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகம் தொடர்ந்து இயங்கி வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய மக்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், நெருக்கடியால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு உதவ தூதரகம் தொடர்ந்து தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சிரியாவின் நிலைமையைக் கருத்தில் கொண்டு, இந்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை இரவு பயண ஆலோசனையை வெளியிட்டது. அதில், "சிரியாவில் வசிக்கும் இந்தியக் குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியது.
அதே நேரம், இந்திய குடிமக்கள் சிரியா செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.சிரியாவில் வசிக்கும் இந்தியர்கள் டமாஸ்கஸில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சகம் அவசர உதவி எண்ணை (+963 993385973) வெளியிட்டுள்ளது. இது தவிர, hoc.damascus@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியையும் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.