ஜுஹாய்: தெற்கு சீனாவின், ஜுஹாய் விளையாட்டு வளாகத்தில் நேற்று முன்தினம் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது மர்ம நபர் காரை ஏற்றியதில் 35 பேர் கொல்லப்பட்டனர். 43 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் சீனாவை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சீனாவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜுஹாய் நகரில் ராணுவ விமான கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த வாரம் இந்த நிகழ்ச்சி நடக்க இருந்த நிலையில், ஜுஹாய் மக்கள் ஆர்வமாக அதற்கு காத்திருந்தனர். இந்த சூழலில்தான் கூட்டத்தில் கார் மோதி 35 பேர் பலியாகியுள்ளனர்.
விபத்து ஏற்படுத்திய நபர் காவல்துறை கட்டுப்பாட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் முழு விசாரணை நடைபெறவில்லை என கூறப்படும் சூழலில், முதற்கட்டமாக அந்த நபருக்கு ஃபேன் என்கிற துணை பெயர் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், 62 வயதான அந்த முதியவருக்கு மனைவியுடன் விவாகரத்து ஆகி கோர்ட் உத்தரவின்படி, மனைவிக்கு சொத்துக்களை பிரித்து கொடுத்ததாகவும், அதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க:சோதனைக் கூடத்திலிருந்து தப்பிய குரங்குகள்! பொதுமக்கள் அச்சம்
இதன் காரணமாக சம்பவத்தன்று ஆவேசமாக காரை இயக்கியதால் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய பிறகே, இது விபத்தா அல்லது திட்டமிட்ட தாக்குதலா என்பது தெரிய வரும்.