இலங்கை (கொழும்பு):தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் மற்றும் இலங்கையின் மூத்த எம்பியுமான ரா.சம்பந்தன்(91) உடல் நலக்குறைவு காரணமாக ஜூன் 30ஆம் தேதி காலமானார். அவர் கடந்த சில நாட்களாகவே, உடல் நலக்குறைவு காரணமாக தலைநகர் கொழும்புவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும், அரசியல் கட்சி தலைவர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
இதையடுத்து இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது பூதவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து விமானம் மூலம் அரசு மரியாதையுன் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் சம்பந்தனின் பூதவுடலுக்கு (வியாழக்கிழமை) பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில், அஞ்சலி நிறைவுக்கு வந்தப் பின்னர், சம்பந்தனது பூதவுடல் அங்கேயே வைக்கப்பட்டது.
பின்னர், தந்தை செல்வா கலையரங்கில் இருந்து கார் மூலம் பலாலி விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து திருகோணமலைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. மேலும், திருகோணமலையில் 2 தினங்கள் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, நாளை (ஞாயிற்றுக்கிழமை) இறுதி ஊர்வலத்துக்குப் பின்னர் தகனம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.