மாஸ்கோ:ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள, குரோகஸ் சிட்டி அரங்கத்தில் பிரபல ரஷ்ய ராக் இசைக் குழுவின் பிக்னிக் இசை நிகழ்ச்சி நடைபெற்று கொண்டு இருந்தது. சுமார் 6 ஆயிரத்து 200 பேர் அமரக்கூடிய அரங்கில் மக்கள் இசை நிகழ்ச்சியை கண்டு களித்துக் கொண்டிருந்த சூழலில், தீடீரென அரங்கினுள் ராணுவ உடை அணிந்து நுழைந்த பயங்கரவாதிகள், கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
மேலும், வெடிகுண்டுகளையும் வீசித் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள், அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். இந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், பெண்கள் உட்பட சுமார் 133 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் இந்த தாக்குதலில் காயமடைந்ததாகவும், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. மேலும், நிகழ்விடத்தில் மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்திற்கு ரஷ்ய அதிபர் புதின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின், உக்ரைன் உள்ளிட்ட நாடுகளும் இந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்து உள்ளார். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், தாக்குதலில் தொடர்புடையதாக 11 பேரை கைது செய்து உள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு படையினர் தெரிவித்து உள்ளனர்.