கைரோ:சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவைச் சேர்ந்த புலம்பெயர்வோரை ஏற்றிக் கொண்டு வந்த படகு ஏமன் அருகே கடலில் கவிழ்ந்து மூழ்கியதில் குறைந்தது 49 பேர் உயிரிழந்ததாகவும், 140 பேரை காணவில்லை என்றும் புலம்பெயர்வோருக்கான ஐநா சர்வதேச அமைப்பு அறிவித்துள்ளது.
சோமாலியாவின் வடக்கு கடற்கரையில் இருந்து சுமார் 260 சோமாலியர்கள் மற்றும் எத்தியோப்பியர்களை ஏற்றிக் கொண்டு ஏடன் வளைகுடா வழியாக படகு ஒன்று பயணித்தது. 320 கிலோ மீட்டர் பயணித்த நிலையில் அந்த படகு, ஏமனின் தெற்கு கடற்கரையில் வந்து கொண்டு இருந்த போது திடீரென மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், குறைந்தது 49 பேர் வரை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படகில் பயணித்த ஏறத்தாழ 140 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
படகில் பயணித்தவர்களில் இதுவரை 71 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தவர்களில் 30க்கும் மேற்பட்டவர்கள் பெண்கள், 6 பேர் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வளைகுட நாடுகளில் வேலை தேடி செல்லும் அகதிகளுக்கு ஏமன் கடற்பரப்பு பிரதான வழித்தடமாக காணப்படுகிறது.