டெல்லி:அக்டோபர் 15, 16ம் தேதிகளில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (Shanghai Cooperation Organisation) மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தானுக்குச் செல்ல உள்ளார்.
இந்த தகவலை வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். கடைசியாக பாகிஸ்தான் சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆவார். ஆப்கானிஸ்தானில் நடந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த 2015ம் ஆண்டு டிசம்பரில் அவர் இஸ்லாமாபாத் சென்றிருந்தார்.
வரும் 15 மற்றும் 16ம் தேதிகளில் எஸ்சிஓ அரசாங்கத் தலைவர்கள் கவுன்சில் (சிஎச்ஜி) பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இது தொடர்பாக புதுடெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "அக்டோபர் 15, 16ம் தேதிகளில் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள எஸ்சிஓ உச்சிமாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு செல்லும் எங்கள் குழுவை வெளியுறவுத் துறை அமைச்சர் வழிநடத்துவார்" என தெரிவித்துள்ளார். மேலும், வெளியுறவுத் துறை அமைச்சரின் பாகிஸ்தான் பயணமானது எஸ்சிஓ மாநாட்டிற்காக மட்டுமே என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் அழைப்பு விடுத்தது. இந்நிலையில் ஜெய்சங்கரின் பாகிஸ்தான் பயணம் இந்திய அரசின் முடிவாக கருதப்படுவதால் முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிங்க:இமாச்சலப் பிரதேசத்தில் கழிப்பறைக்கு ரூ.25 வரியா? பாஜக ஆவேசம்; முதல்வர் மறுப்பு
பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகித்து வரும் எஸ்சிஓ மாநாட்டிற்கு மூத்த அமைச்சரை அனுப்பும் முடிவு, அம்மாநாட்டின் மீதான இந்தியாவின் உறுதிப்பாட்டைக் காட்டுவதாகக் கருதப்படுகிறது.
புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரியில் பாகிஸ்தானின் பாலாகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத பயிற்சி முகாமை இந்திய போர் விமானங்கள் தாக்கின. இதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு கடுமையான பாதிப்புக்குள்ளானது.
கடந்த 2019 ஆகஸ்ட் 5 அன்று ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெறுவதாகவும், அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதாகவும் இந்தியா அறிவித்த பிறகும் இருநாடுகளிடையேயான விரிசல் மேலும் அதிகரித்தது.
இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய எஸ்சிஓ, ஒரு செல்வாக்குமிக்க பொருளாதார மற்றும் பாதுகாப்பு கூட்டணியாகும். இது மிகப்பெரிய பிராந்தியங்களுக்கு இடையே சர்வதேச அமைப்புகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
ஷாங்காயில் கடந்த 2001ல் தொடங்கப்பட்ட எஸ்சிஓ அமைப்புடனான இந்தியாவின் தொடர்பு 2005 முதல் தொடங்கிறது. பார்வையாளர் நாடாக பங்கேற்று வந்த இந்தியா கஜகஸ்தானின் அஸ்தானாவில் கடந்த 2017-ல் நடைபெற்ற உச்சிமாநாட்டில் எஸ்சிஓ-வின் நிரந்தர உறுப்பு நாடாக ஆனது. அதே ஆண்டில் பாகிஸ்தானும் நிரந்தர உறுப்பு நாடாக மாறியது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்