தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்! குழந்தைகள், பெண்கள் என 30 பேர் பலி! - Israel Strikes in Gaza 30 dead

காசாவில் அகதிகளின் தற்காலிக புகலிடமாக இயங்கி வந்த பள்ளி மீது இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 7 குழந்தைகள் உள்பட 30 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Israel Air strike in Gaza 30 Dead
Israel Air strike in Gaza 30 Dead (AP)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 28, 2024, 12:44 PM IST

டெய்ர் அல்-பாலாஹ்: மத்திய காசாவில் தற்காலிக அகதிகள் முகாமாக செயல்பட்டு வந்த பள்ளி மீது இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 7 குழந்தைகள், ஏழு பெண்கள் உள்பட 30 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட பள்ளியில் ஆயிரக்கணக்கான மக்கள் புகலிடம் தேடி தங்கி இருந்ததாக காசா சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலிய படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தவும், ஹமாஸ் குழுவின் ஆயுத கிடங்கு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. அதேநேரம், இஸ்ரேலிய ராணுவத்தின் அறிக்கைக்கு ஹமாஸ் படையினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

அப்பாவி மக்கள் மீது இஸ்ரேலிய படைகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருவதாக ஹமாஸ் படையினர் குற்றம்சாட்டி உள்ளனர். பள்ளியை தற்காலிக புகலிட முகமாக மாற்றி ஆயிரக்கணக்கான பொது மக்கள் தங்க வைக்கப்பட்டு இருந்ததாகவும் மேலும் மருத்துவ சிகிச்சை வழங்கக் கூடிய வகையில் முகாமில் பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினரும், தன்னார்வ படையினரும் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக கடந்த சனிக்கிழமை (ஜூலை.27) இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இதனிடையே இஸ்ரேல் - காசா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்கா, எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் இத்தாலியில் இன்று இஸ்ரேல் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இது தொடர்பாக சிஐஏ உளவு அமைப்பின் இயக்குநர் பில் பர்ன்ஸ், கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல்-தானி, மொசாட் இயக்குநர் டேவிட் பர்னியா மற்றும் எகிப்திய உளவுத் தலைவர் அப்பாஸ் கமெல் ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மூன்று கட்ட ஒப்பந்தத்தின் அடிப்படயில் இஸ்ரேலும் ஹமாசும் போர் நிறுத்த நடவடிக்கையில் உடன்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பெஞ்சமின் நெதன்யாகு காசா போரில் முழுமையான வெற்றி அடையும் வரை தொடரப் போவதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதியில் ராக்கெட் தாக்குதல்! 12 பேர் பலி! யார் காரணம்? - Israel rocket fire attack

ABOUT THE AUTHOR

...view details