பாங்காக்: மியான்மரின் மேற்கு பகுதியில் சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஆயுதம் ஏந்திய குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமத்தில் மியான்மர் ராணுவம் நேற்று தாக்கியதில் 40 பேர் கொல்லப்பட்டதாகவும், 20 காயமுற்றதாகவும் உள்ளூர் அறக்கட்டளை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
மியான்மரின் மேற்கு பகுதியில் உள்ள ராம்ரீ தீவில் இருக்கும் கியாக் நி மாவ் கிராமத்தின் மீது 8ஆம் தேதியன்று மியான்மர் ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. விமானத்தில் இருந்து போடப்பட்ட குண்டுகள் வெடித்ததில் அந்த கிராமத்தில் உள்ள வீடுகள் தீப்பற்றி எரிந்தன. இந்த கிராமம் அரக்கான் என அழைக்கப்படும் பழங்குடியின இனத்தின் ஆயுதம் ஏந்திய குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது. தாக்குதல் நடந்த பகுதி தொலை தூரத்தில் உள்ள கிராமப் பகுதி என்பதால் மேல் அதிக விவரங்கள் உடனடியாக தெரியவரவில்லை. மேலும் அந்த பகுதிகளில் மொபைல் போன், இணையதளம் வசதிகளும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூ கி ஆட்சி்ககு எதிராக 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் ராணுவம் கிளர்ச்சியில் ஈடுப்டடது. அப்போது முதல் மியான்மர் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மியான்மரில் அமைதியாக நடைபெறும் போராட்டங்கள் மீது கூட ராணுவம் தாக்குதல் நடத்துகிறது என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர். மியான்மரின் பெருபாலான பகுதிகள் இப்போது ராணுவ ஆட்சிக்கும், அதற்கு எதிரான குழுக்களுக்கும் இடையே மோதலால் பாதிக்கப்பட்டுள்ளன.