தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அதிபர் தேர்தலில் அனுரா குமார திசாநாயக வெற்றி; இலங்கையில் முதன்முறையாக அமைகிறது கம்யூனிஸ்ட் ஆட்சி! - sri lanka election result 2024

இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரா குமார திசாநாயக (56) வெற்றி பெற்றதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அனுரா குமார திசாநாயக
அனுரா குமார திசாநாயக (Credits - Anura Kumara Dissanayake X Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2024, 8:53 PM IST

Updated : Sep 22, 2024, 10:34 PM IST

கொழும்பு:இலங்கையின் ஒன்பது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று (செப்.21) நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நள்ளிரவு முதலே வாக்குகள் எண்ணப்பட்டன. சுற்று வாக்கு எண்ணிக்கையில் தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவரான அனுர குமார திசாநாயக 39.52 சதவீத வாக்குகளும், எதிர்க்கட்சித் தலைவரும், சமகி ஜன பலவேகயா கட்சி வேட்பாளருமான சஜித் பிரேமதாச 34.28 சதவீத வாக்குகளும் பெற்றனர்.

எந்த வேட்பாளரும் வெற்றிக்கு தேவையான 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெறாத நிலையில், அந்நாட்டு தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக, 2வது சுற்று விருப்ப வாக்குகளை எண்ணுமாறு அந்நாட்டு தேர்தல் ஆணையத் தலைவர் ஆர்.எல்.ஏ.எம். ரத்நாயக அறிவித்தார்.

இரண்டாவது சுற்று விருப்ப வாக்கு எண்ணிக்கை முடிவில் அனுர குமார திசாநாயக முன்னிலை பெற்றதையடுத்து இலங்கை அதிபர் தேர்தலில் அவர் வெற்றி பெற்றதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து, இடதுசாரி கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவர் முதன்முறையாக இலங்கை அதிபராக பதவியேற்க உள்ளார்.

முன்னதாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் (என்பிபி) அனுரா குமார திசாநாயக, சமகி ஜன பாலவேகயா கட்சியின் சஜித் பிரேமதாச ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் இருவரில் யாரும் 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளை பெறவில்லை. இதையடுத்து இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக 2வது விருப்ப வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இரண்டாவது சுற்று விருப்ப வாக்கு எண்ணிக்கை நடைமுறைப்படி, குறைந்த வாக்குகள் பெற்ற வேட்பாளர்கள் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவர். முன்னிலை பெறும் முதல் இரண்டு வேட்பாளர்களிடையே மட்டும் போட்டி நீடிக்கும்.

மேலும், வெளியேற்றப்பட்ட வேட்பாளர்களின் வாக்குச்சீட்டுகளில் இரண்டாவது முன்னுரிமை கணக்கில் கொள்ளப்பட்டு, அதில் குறிப்பிடப்பட்டுள்ள வேட்பாளரின் பெயரில் வாக்குகள் சேர்க்கப்படும். இதன்படி, இரண்டாவது விருப்ப சுற்று வாக்கு எண்ணிக்கையில் இந்திய நேரம் மாலை 5 மணி நிலவரப்படி, இடதுசாரி வேட்பாளரான தேசிய மக்கள் சக்தி கட்சியின் அனுரா குமார திசாநாயக முன்னிலை பெற்று வருகிறார்.

இவர் 42 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி முகத்தில் இருந்தார். 56 வயதான அனுர குமார திசநாயக, இரண்டாவது இடத்தில் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவை (33 சதவீதம்) விட கிட்டத்தட்ட 1.3 மில்லியன் வாக்குகள் முன்னிலை வகித்தார்.

இலங்கையில் கடந்த 2022ம் ஆண்டு பொருளாதார சரிவின் உச்சத்தில் பதவியேற்ற தற்போதைய அதிபர் ரனில் விக்கிரமசிங்கே, சர்வதேச நாணய நிதியத்தின் விதிகளின்படி கடுமையான சிக்கனக் கொள்கைகளை விதித்தார். இது தேர்தலில் எதிரொலித்ததன் காரணமாக, சுயேச்சையாக களம்கண்ட அவர் சுமார் 17 சதவீத வாக்குகளுடன் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.

Last Updated : Sep 22, 2024, 10:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details