நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு புறப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ரோம் நகருக்கு திருப்பி விடப்பட்டது. நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு 15 விமான பணியாளர்கள் மற்றும் 199 பயணிகளுடன் புறப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ரோம் நகருக்கு திருப்பிவிடப்பட்டது.
பின்னர், விசாரணைக்கு பிறகு டெல்லிக்கு விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த விவகாரம் குறித்து ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (FAA) கூறுகையில், அமெரிக்கா ஜான் எஃப். கென்னடி விமான நிலையத்தில் இருந்து கடந்த 22ஆம் தேதி புறப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் AA292 இத்தாலி நாட்டு தலைநகர், ரோம் நகருக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக திருப்பி விடப்பட்டது.
இந்த 787-9 விமானம் ரோம் நகரில் உள்ள லியோனார்டோ டா வின்சி சர்வதேச விமான நிலையத்தில் இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தரையிறங்கியது. இத்தாலிய ஊடக நிறுவனம் கூறுகையில், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், வெடிகுண்டு மிரட்டல் காரணத்தால் ரோம் நகரில் தரையிறங்க அனுமதி கேட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கிய பிறகு, விமான அதிகாரிகள் விமானத்தை சோதனையிட்டனர்.