ஹைதராபாத்: ஜப்பானில், கடந்த 8 மாதங்களில் 2400க்கும் மேற்பட்ட சிஃபிலிஸ் வழக்குகள் பதிவாகியுள்ளதாக டோக்கியோ தொற்றுநோய் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் இந்த நோய் தொற்று வழக்குகள் வேகமாக அதிகரித்து வருகின்றன என சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த 2023ம் ஆண்டில் 3,701 வழக்குகள் பதிவாகியது குறிப்பிடத்தக்கது.
சிஃபிலிஸ் நோய் என்றால்?:இந்த நோய்த் தொற்று டிரிபோனிமா பல்லிடம் எனும் பாக்டீரியாவினால் ஏற்படும் ஒரு பால்வினை நோய். சிஃபிலிஸ், புண் உள்ள நபருடன் நேரடி உறவு வைத்துக்கொள்ளும் போது ஒரு நபரிடமிருந்து மற்ற நபருக்கு பரவுகிறது.
சிஃபிலிஸ் அறிகுறிகள்:
- பிறப்புறுப்பு, ஆசனவாய் மற்றும் வாயில் சிறு சிறு கொப்புளங்கள் தோன்றுவது
- உடல் முழுவதும் சொறி
- காய்ச்சல்
- சோர்வு
- சட்டென எடை குறைவது
சிஃபிலிஸ் பாலுறவின் மூலம் பரவும் நோய்த்தொற்று (GETTY IMAGES)
பாதிப்புகள் என்ன?:
- சாதாரண கொப்புளங்கள் தோன்றிய ஆறு மாதங்களுக்குள் உடல் முழுவதும் சொறி பரவுகிறது
- இந்த ஆரம்ப அறிகுறிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால், இதயம், நரம்பு மண்டலம் மற்றும் எலும்புகளை பாதிக்கப்படுகிறது.
- சிஃபிலிஸின் கடைசி கட்டமாக குருட்டுத்தன்மை மற்றும் மூளை பாதிப்பு ஏற்படுகிறது.
சிசுவிற்கும் பாதிப்பு?: பிறவியிலேயே ஏற்படும் இந்த நோய் பாதிப்பு, கர்ப்ப காலத்தில் கருவில் இருக்கும் சிசுவிற்கும், தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கும் பரவுகிறது. தாயிடம் இருந்து பரவும் இந்த நோய் பாதிப்புகள், பெரும்பாலும் அவர்களில் பாலியல் துணையிடமிருந்து பரவுகின்றன.
இது குழந்தைகளின் வாழ்நாள் முழுவதும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. சிலருக்கு, கண் வீக்கம் மற்றும் செவித்திறன் இழப்பும் ஏற்படுகிறது. சிஃபிலிஸ் நோயிற்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளித்தால் முற்றிலும் குணப்படுத்தக்கூடியது தான்.
சிஃபிலிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் ஆண்கள் தான் (GETTY IMAGES) யாரை அதிகம் பாதிக்கிறது?: சிஃபிலிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் ஆண்கள் தான் என்று தரவுகள் தெரிவிக்கின்றன. 20 முதல் 50 வயதிற்குள் உள்ள ஆண்களையும், 20 முதல் 30 வயதுடைய பெண்களை இந்த நோய் அதிகம் பாதிக்கிறது. சிலருக்கு நோய்த்தொற்று ஆரம்பகாலத்தில் ஏற்பட்டாலும், பல ஆண்டுகளுக்குப் பிறகு தான் அறிகுறிகள் தோன்றுகின்றன. இதுவே, இந்நோய் பற்றி பலருக்கும் விழிப்புணர்வு இல்லாமல் போனதற்கு காரணம் என்கின்றனர்.
ஜப்பானில் உச்சம் தொடுகிறது: இதற்கிடையில், சிஃபிலிஸ் நோயாளிகளின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்த டோக்கியோவின் ஷின்ஜுகு மற்றும் தாமா போன்ற பகுதிகளில் இலவச பரிசோதனை மற்றும் ஆலோசனை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. டோக்கியோ பெருநகர அரசாங்கம் உள்ளூர்வாசிகளை நோயின் ஏதேனும் அறிகுறிகளைக் கண்டால் உடனடியாக பரிசோதனை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க:
- ஓரினச் சேர்க்கையாளர்களை அதிகம் பாதிக்கும் குரங்கம்மை? - மருத்துவர்கள் எச்சரிப்பது ஏன்?
- கண் தானம் இவர்கள் எல்லாம் செய்யக்கூடாதா?...பரவும் கட்டுக்கதைகளுக்கு முற்றுப்புள்ளி!
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்