தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

மீன் வாங்குவது எப்படி? பழைய மீனை எப்படி கண்டுபிடிப்பீங்க.! - How to identify fresh fish - HOW TO IDENTIFY FRESH FISH

கடையில் சென்று மீன் வாங்கும்போது கெட்டுப்போன மீன் மற்றும் கெடாத ஃப்ரஷ் மீனை எவ்வாறு கண்டறிவது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 21, 2024, 3:48 PM IST

Updated : Apr 22, 2024, 6:19 PM IST

சென்னை:அசைவப் பிரியர்களின் பிடித்தமான உணவு அட்டவணையில் மீன் இல்லாமல் இருக்காது. வரும் ஜூன் மாதம் 15ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் இப்போது எந்த மீன்களை வாங்கலாம். கடைகளுக்கு மீன் வாங்கச் செல்லும்போது புதிதாக வந்த மீன் எது? பழைய மீன் எது? என எப்படிப் பார்த்து வாங்குவது என்ற குழப்பம் இருக்கும்.

ஒரு சில வியாபாரிகள் பழைய மீனைப் பொதுமக்கள் தலையில் கட்டி விடுவார்கள். தடி கொடுத்து அடி வாங்கிய கதையாக, காசு கொடுத்துக் கெட்டுப்போன மீனை வாங்காமல் இருக்க என்ன செய்வது? இந்த தொகுப்பில் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.. மீன் வாங்கும்போது கவனமாக இருங்கள்.

மீன் வாங்கும்போது இவற்றைக் கவனித்துப் பாருங்கள்.!

  • மீன்களின் கண்கள் நல்ல பளபளப்புத் தன்மையுடன் மின்ன வேண்டும்
  • கண்கள் உள்ளே போய் சிவந்தோ அல்லது பழுப்பு நிறத்திலோ இருக்கக்கூடாது
  • மீனைக் கையில் எடுத்தால் அதன் தோல் குழைந்தும் இல்லாமல் ஐஸில் போட்டுப் போட்டு கல்லுபோல் இல்லாமலும் மிருதுவாக இருக்க வேண்டும்
  • மீனின் செவுள் பகுதியில் இரத்த நிறம் இருக்க வேண்டும் அல்லது அது மங்கிய நிறத்தில் இருக்க வேண்டும். கருப்பு நிறத்திலோ, அழுக்கு நிறத்திலோ இருக்கக்கூடாது
  • அரசின் அறிவுறுத்தல் மீன்களை ஐஸில் போடாமல் வெளியே வைத்திருந்தால் வாங்கக்கூடாது
  • மீன்களின் மீன் வாடை அல்லாமல் துர்நாற்றம் வீசினாலும் அந்த மீன்கள் புதிய மீன்களாக இருக்காது

இதுபோன்ற சில விஷயங்களைக் கவனித்துப் பார்த்து மீன்களை வாங்க வேண்டும். அதேபோல, மீனின் ரகத்தை மாற்றியும் பொதுமக்கள் ஏமாற்றப்படுகின்றனர். சவுரா, பார் சீலா, பார் வஞ்சரம் போன்ற மீன்களை ஒருஜினல் வஞ்சரம் மீன் எனக்கூறி விற்பனை செய்கிறார்கள். இது மீன் கடைகளில் மட்டும் அல்ல உணவகங்களிலும் நடக்கிறது எனக்கூறப்படுகிறது.

வஞ்சரம் ஃப்ரைக்கு பதிலாக சவுரா, பார் சீலா, பார் வஞ்சரம் போன்ற மீன்களைச் சமைத்துக் கொண்டு வந்தால், வாடிக்கையாளர்கள் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவற்றின் சுவை ஒத்துப்போவதாகக் கூறப்படுகிறது. அதேபோல, பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கிழங்கான் மீனைக் கேட்டால், அதற்குப் பதிலாக தண்ணி பன்னா மீனைக் கொடுத்து ஏமாற்றுவதாகக் கூறப்படுகிறது.

பொதுமக்கள் மீன்களை வாங்கும்போது அது நீங்கள் கேட்கும் மீன்தானா என்பதை ஒன்றுக்கு இரண்டு முறை சரி பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதேபோல, வளர்ப்பு இறாலைக் கடல் இறால் எனக்கூறி விற்பனை செய்து வருகின்றனர். அதை நீங்கள் மிக எளிதாகக் கண்டுபிடிக்கலாம். வளர்ப்பு இறாலாக இருந்தால், நிறத்தில் ஒன்றுக்கொன்று வேறு பாடு இன்றி, பழுப்பு நிறத்தில் இருக்கும். அதேபோல அதன் அளவும் ஒரே போல இருக்கும். கடல் இறாலாக இருந்தால் அது நிறத்தில் ஒன்றுக்கொன்று வேறுபட்டும், அளவில் வித்தியாசத்துடனும் காணப்படுகிறது.

மீன்பிடி தடைகாலத்தில் எந்த வகை மீன்கள் கிடைக்கும்.?இன்றைய நிலவரப்படி தூத்துக்குடி மீன் மார்க்கெட்டை பொருத்தவரை அனைத்து வகையான மீன்களும் கிடைக்கிறது. ஆனால் முன்பு இருந்ததை விடக் குறைந்து அளவு கிடைப்பதால் ரூ. 100 முதல் ரூ.150 வரை விலை உயர்வு காணப்படுகிறது. அதேபோல பெரிய அளவு மீன்கள் அதிகம் கிடைப்பதிலும் தட்டுப்பாடு இருக்கிறது. இது குறித்து மீனவர்களிடம் கேட்டபோது, மீன்பிடி தடைக்காலம் என்பதால் நாட்டுப் படகு மூலம் சுமார் கடலுக்குள் 2 முதல் 3 கிலோ மீட்டர் வரை சென்று மட்டுமே மீன் பிடிப்பதாகவும், இதனால் ஆழ்கடல் மீன்கள் கிடைப்பது குறைந்துள்ளதாகவும் கூறினார்.

மீனில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா? கடல் மீன்களில் உடலுக்குத் தேவையான புரோட்டின், விட்டமின், இரும்புச் சத்து, கால்சியம் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. மத்தி மீன் உள்ளிட்ட சில வகை மீன்களில் ஒமேகா 3 அதிக அளவில் காணப்படுகிறது. ஆரோக்கியம் மட்டும் இன்றி மீனில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்கள் அழகு சாதன பொருட்களின் தயாரிப்பு, மருந்து தயாரிப்பு உள்ளிட்ட பல தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

தமிழகத்தின் கடல் பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்கள் இந்தியா மட்டும் இன்றி கப்பல்கள் மூலம் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. நாட்டின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் மிகுந்த பங்களிப்பது மீன்கள் என்றால் இந்த தொழிலை நம்பி சுமார் 28 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தைக் கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க:ஒரு துண்டு மீனுக்காக உயிரை பணயம் வைக்கும் ஜப்பானியர்கள்.. ஃபூகு நச்சு மீன் அவ்வளவு சுவையா? - Japanese Eat Poisonous Fugu Fish

Last Updated : Apr 22, 2024, 6:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details