அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே, கோடைக்கால வெயில் தமிழ்நாட்டில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க, கோடைக்காலத்தில் திட உணவுகளை விட, ஆரோக்கியமான பழங்கள் மற்றும் குளிர்ச்சியூட்டும் பழச்சாறுகளை சாப்பிடுவதில் பலர் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
அந்த வரிசையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோடைக்காலத்தில் விரும்பி உண்ணும் பழங்களில் முதலிடத்தை பிடிப்பது தர்பூசணி தான். ஆனால், இன்றைய காலகட்டத்தில், பழங்கள் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டும், வண்ணம் செலுத்தப்பட்டு விற்கப்படுகிறது. குறிப்பாக, கோடைக்கால சிறப்புப் பழமாகக் கருதப்படும் தர்பூசணி, வேகமாகப் பழுக்கவும், சிவப்பு நிறத்தில் தோன்றவும் ஊசி மூலம் வண்ணம் செலுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த சூழலில், கலப்படம் செய்யப்பட்ட தர்பூசணியை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்த வீடியோவை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) வெளியிட்டுள்ளது. அதன்படி, கலப்படம் செய்யப்படாத தர்பூசணியை எப்படி வாங்குவது என தெரிந்து கொள்ளலாம் வாங்க...
கலப்படம் செய்யப்படாத தர்பூசணி வாங்குவது எப்படி?:
- FSSAI வெளியிட்டுள்ள வீடியோவில் உள்ள இந்த எளிய சோதனையைப் பின்பற்றுவதன் மூலம் கலப்படம் செய்யப்பட்ட தர்பூசணியை நீங்கள் எளிதாகக் கண்டறியலாம்.
- கடையில் இருந்து தர்பூசணி வாங்கும்போது, முதலில் ஒரு சிறிய சேம்பிள் துண்டை வெட்டி கொடுக்க சொல்லுங்கள். பின்னர் ஒரு சிறிய காட்டன் துண்டு அல்லது டிஷ்யூ பேப்பரை வைத்து வெட்டப்பட்ட துண்டின் உட்புறத்தை தேய்க்கவும்.
- தேய்க்கும்போது பருத்தி அல்லது டிஷ்யூ பேப்பர் சிவப்பு நிறமாக மாறினால், அது கலப்படம் செய்யப்பட்ட தர்பூசணி என வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது. இயற்கையாக வளர்க்கப்பட்ட தர்பூசணி நிறம் மாறாது எனவும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எளிய சோதனை மூலம் கலப்படம் செய்யப்பட்ட தர்பூசணியைக் கண்டறிய முடியும் என்று FSSAI அதிகாரிகள் கூறுகின்றனர்.