சென்னை: கோடைக் காலத்தில் இரசாயனம் பயன்படுத்திப் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களைச் சாப்பிடும்போது வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதுடன், புற்றுநோய் பாதிப்பும் வரும் என உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் ஈ.டி.வி பாரத் செய்திக்குச் சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.
கேள்வி:மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில், அவற்றை இரசாயனம் வைத்து செயற்கையாகப் பழுக்க வைப்பதாகக் கூறப்படுகிறதே அதில் இருக்கும் உண்மை என்ன?
பதில் (அதிகாரி சதீஷ்குமார்) :கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் மாம்பழம் வரத்து அதிகரித்துள்ளது. மாம்பழத்தைப் பழுக்க வைக்கப் பெரிய மண்டிகளில் இரசாயன கற்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் அதனை மாற்றி தற்போது உணவு பாதுகாப்புத் துறையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட எத்தலின் என்ற வேதிப்பொருள் மாம்பழம் அடைக்கப்பட்ட பெட்டியில் அனுமதிக்கப்பட்ட அளவில் வைத்துக் கொடுக்கலாம்.
இதனால் எத்தலின் வேதிப்பொருளில் இருந்து வரக்கூடிய வாயு மூலம் மாம்பழம் பழுக்கும். குறைந்த அளவில் எத்தலின் பயன்படுத்தும் பொழுது பழம் பழுப்பதற்கு அதிக காலம் எடுத்துக் கொள்ளும் என்பதால், வேகமாகப் பழுக்க வைப்பதற்காகப் பலர் எத்தலின் வேதிப்பொருட்கள் அடங்கிய பொட்டலங்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.
மாம்பழம் விளையக்கூடிய இடத்திலிருந்து சென்னைக்குப் பெரிய பெட்டிகளிலோ அல்லது பழக் கூடையிலோ வரும். அந்தப் பெட்டிகளில் 10 முதல் 15 எத்தலின் பொட்டலங்களை நேரடியாகப் போட்டு மூடி வைக்கின்றனர். இதனால் அந்த பழத்தில் இருந்து வரும் வெப்பத்தில் மாம்பழம் வேகமாகப் பழுக்கும் அவ்வாறு பழுக்க வைக்கக் கூடிய பழங்களைத்தான் செயற்கையாகப் பழுக்க வைக்கப்படும் பழங்கள் எனக்கூறுகிறோம்.
கேள்வி: இயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்ட பழத்திற்கும், செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்ட பழத்திற்கும் எப்படி வித்தியாசம் காண்பது?
பதில் (அதிகாரி சதீஷ்குமார்) : செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் கண்டிப்பாகச் சுவையாக இருக்காது. புளிப்புத்தன்மையுடன் இருக்கும். மேலும், பழம் முழுவதும் ஒரே மாதிரி மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஒரு கூடையில் உள்ள அனைத்துப் பழங்களும் நிறம் மற்றும் பழுத்திருக்கும் அளவில் ஒரேபோல் இருக்கும்.
கேள்வி: மாம்பழம் கற்கள் வைத்துப் பழுக்க வைக்கப்பட்டதா? அல்லது எத்தினால் மூலம் பழுக்க வைக்கப்பட்டதா? என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?
பதில் (அதிகாரி சதீஷ்குமார்) :அதை மிக எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். பொதுவாக நான் ஏற்கனவே கூறியதுபோல, கடைகளில் மஞ்சள் நிறத்தில் நமது கண்களைப் பறிக்கும் வகையில் மாம்பழங்களை அடுக்கி வைத்திருப்பார்கள். இது போன்ற பழங்கள் முழுக்க முழுக்க கற்களை வைத்தோ அல்லது எத்தலின் பயன்படுத்தியோ பழுக்க வைக்கப்பட்டவையாகத்தான் இருக்கும். ஆனால் கற்கள் வைத்துப் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் அதன் தோல் பகுதியில் கருப்பு நிறத்தில் வெந்து இருக்கும். இதை வைத்து வித்தியாசம் காணலாம்.
கேள்வி: இயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் எப்படி இருக்கும்?