சென்னை: கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், மக்கள் நீராகாரம் மிக்க உணவுகள் மற்றும் பழங்களை உட்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பலரும் கோடையில் கிடைக்கும் தர்பூசணி போன்ற பழங்களை அதிக அளவு விரும்பி வாங்கி உட்கொள்கின்றனர். ஆனால் அதிலும் கலப்படம் செய்து சிலர் பொதுமக்களின் உயிருடன் விளையாடுகிறார்கள் என்பது வேதனைக்குறிய விஷயமாக இருக்கிறது.
அதாவது தர்பூசணி கொடியில் காய் வளரும்போதே Forchlorfenuron என்ற தாவர வளர்ச்சி ஊக்கிவிப்பானை சேர்க்கின்றனர். இதனால் தர்பூசணி பழத்தின் எடை அதிகரிப்பதுடன் விரைவாக பழுக்கவும் செய்யும் எனக்கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து தர்பூசணி பழத்தை பறித்த பிறகு அதில் செயற்கை சுவையூட்டி மற்றும் நிறமூட்டியாக எரித்ரோசின் B ஊசி வழியாக செலுத்தப்படுகிறது எனவும் இதனால் பழம் நல்ல சிவந்த நிறத்தில் மிக இனிப்பாக இருக்கும் எனவும் சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் கூறியுள்ளார்.
இதுபோன்ற தர்பூசணி பழத்தை உட்கொள்வதால் என்ன நடக்கும்? நரம்பு தளர்ச்சி, தலைவலி உள்ளிட்டவற்றுடன் காலப்போக்கில் புற்று நோய் கூட வர அதிகம் வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தர்பூசணி பழம் சுவையூட்டி ஊசி செலுத்தப்பட்டதா? இல்லையா? என்பதை எப்படி தெரிந்துகொள்வது?
- தர்பூசணி பழத்தை வாங்கி வந்து ஒரு சிறிய துண்டை வெட்டி எடுத்து ஒரு பத்திரத்தின் உள் தண்ணீர் ஊற்றி அதில் போட்டு வையுங்கள். சிறிது நேரம் அப்படியே விட்டு விட்டு, அந்த தண்ணீரை பாருங்கள். அதில் சுவையூட்டி ஊசி செலுத்தப்பட்டிருந்தால் அந்த தண்ணீரின் நிறம் சிவப்பாக மாறி இருக்கும். இல்லை என்றால் அது நல்ல பழம் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
- தர்பூசணி அடர் பச்சையாக இருந்தும், பழத்தின் உள் பகுதி வெள்ளையாக இருந்தும் சுவை இனிப்பாக இருந்தால் அது சுவையூட்டி செலுத்தப்பட்ட பழம்.
- தர்பூசணி பொதுவாக 7 முதல் 8 நாட்கள் வரை வெட்டாமல் வைத்திருந்தால் கெட்டுப்போகாமல் இருக்கும். ஆனால் வாங்கி வந்த இரண்டு நாட்களிலேயே கெட்டு விட்டது என்றால் பழைய பழமாக இருக்கலாம் அல்லது சுவையூட்டி செலுத்தப்பட்ட பழமாகவும் இருக்கலாம்.