சென்னை:குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. குழந்தையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெற்றோரின் பங்கு மிகவும் முக்கியமானது. பெற்றோரின் வளர்ப்பிலேயே குழந்தையின் புத்திசாலித்தனம் வெளிப்படுகிறது. இன்றைய நவீன
யுகத்தில் குழந்தைகளை கையாள்வது இளம் தலைமுறை பெற்றோருக்கு பெரும் சவாலாக இருக்கும் சூழலில், சமீபத்தில் இளம் தாய் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட வீடியோ ஒன்று பேசுபொருளானது.
மால் ஒன்றுக்கு தன் குழந்தையுடன் அவர் சென்றிருந்தபோது, அங்கு 12,000 ரூபாய் மதிப்பிலான வாசனைத் திரவிய பாட்டிலை குழந்தை உடைத்துவிடுகிறது. ஆனால் அதற்காக தன் குழந்தையை திட்டவில்லை என்று அந்த இளம்பெண் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். தன் பிள்ளை மீதான அந்த தாயின் கருணைக்கு வரவேற்பு கிடைத்த அதேசமயம். தவறு செய்யும் பிள்ளையை கண்டிப்பது எப்படி என விவாதிக்கத் தொடங்கினர்.
உண்மையில் குழந்தை வளர்ப்பு எனும் கலையை பெற்றோர் எவ்வாறு கைகொள்வது? யுனிசெஃப் அமைப்பின்(United Nations Children's Fund)வழிகாட்டுதல் என்ன? என்பது குறித்தும், குழந்தைகளை ஆரோக்கியமான வழியில் எவ்வாறு நல்வழிபடுத்துவது என்பது பற்றியும் எடுத்துரைக்கிறார் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் குழந்தை மற்றும் குடும்ப சமூகப் பணியின் பேராசிரியரான லூசி க்ளூவர்.
பிறந்த குழந்தைகளை விட பள்ளிப்பருவத்தில் இருக்கும் குழந்தைகளை சமாளிப்பதும், அவர்களை நல்வழிப்படுத்துவதும் மிகவும் கடினமானதாக இருப்பதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். குழந்தைகளும் கோபம், தனிமை, குழப்ப உணர்வு உள்ளிட்ட உணர்வுகளை எதிர்கொள்கின்றனர். அந்த சமயத்தில், “சிறுவயதிலேயே உனக்கென்ன கோபம், தனிமை, குழப்பம்?” என்று அவர்களிடம் வாக்குவாதம் செய்யக்கூடாது.
குழந்தைகள் பெற்றோர்களுக்கு விருப்பமில்லாத ஒன்றை செய்யும்போது, அவர்களிடம் வன்முறையில் ஈடுபடக்கூடாது. இதுபோன்ற சமயங்களில் குழந்தைகளிடம் கத்துவது, அவர்களை அடிப்பது ஒருபோதும் பயன் தராது. பெற்றோர்கள் இப்படி நடந்து கொள்வதால் பிள்ளைகள் மன அழுத்தம், இதய நோய், மனச்சோர்வால் பாதிக்கப்பட்டு, போதைப்பொருட்களுக்கு ஆளாவது, பள்ளியில் இருந்து இடை நிற்றல், தற்கொலை உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாக பேராசிரியரான லூசி க்ளூவர் எச்சரிக்கிறார்.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் பாசிட்டிவ்வாக நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள, இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர், பிள்ளைகளை பெற்றோர் எவ்வாறு புத்திசாலித்தனமாக வளர்ப்பது என்பது குறித்து சில வழிமுறைகளையும் கூறுகிறார்.
குழந்தைகளிடம் நேரம் செலவிடுங்கள்:எந்த ஒரு உறவையும் வலுப்படுத்துவதற்கு அவர்களுடன் நேரம் செலவிட வேண்டும். அவர்களிடம் முகம் கொடுத்து உரையாட வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது 20 நிமிடங்களாவது அவர்களுடன் கலந்துரையாடலாம். அவர்களுடன் இணைந்து பாட்டு பாடலாம்; ஆடலாம்.