சென்னை: உணவகங்களில், சில்வர் கலர் பூசப்பட்ட பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் கவர்களில் பார்சல் செய்து கொடுக்கப்படும் உணவுகளை நாம் உண்பதால், புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக எஸ்.ஆர்.எம் குளோபல் மருத்துவமனையின் மருத்துவர் யூ.பி சீனிவாசன் எச்சரித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில், ஹோட்டலில் இருந்து ஒருவர் பிரியாணி பார்சல் வாங்கி வந்து உண்ணும் போது, பார்சல் செய்யப்பட்டிருந்த சில்வர் பேப்பரின் மேலே உள்ள கலர், உணவுடைய சூட்டிற்கு உணவில் ஒட்டிக்கொண்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில் ஆரோக்கிய சீர்கேடு குறித்து பல தரப்பினர் கேள்விகளை எழுப்பினர்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் உணவகங்களில் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் சில்வர் பேப்பர் உள்ளிட்டவற்றில் உணவுகளை பார்சல் செய்து கொடுப்பதற்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை கடந்த திங்கட்கிழமை (நவ.18) உத்தரவிட்டது. இருப்பினும், டீ, காபி, சாம்பார், சால்னா உள்ளிட்ட திரவ உணவு வகைகள் மற்றும் பிரியாணி, புரோட்டா போன்ற உணவுகள் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் சில்வர் பேப்பர்களில் பார்சல் செய்து வழங்கப்படுகின்றது. குறிப்பாக, ஃபாஸ்ட் புட் கடைகளில், பிளாஸ்டிக் கவர்களில் தான் உணவுகள் வழங்கப்படுகின்றன.
- புற்றுநோய் அபாயம்: "சுடச் சுட உணவுகளை சில்வர் பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் கவர்களில் வைத்துக்கொடுக்கும் போது, புற்றுநோய் ஏற்படுவதற்காக வாய்ப்புகள் உள்ளது. சூடான உணவுகள், பிளாஸ்டிக்கில் ரசாயன எதிர்வினையை ஏற்படுத்துகிறது (Chemical Reaction). அதனை நாம் சாப்பிடும் போது, உணவுடன் சேர்ந்து பிளாஸ்டிக்கும் நமது உடலுக்குள் செல்கிறது" என்கிறார் எஸ்.ஆர்.எம் குளோபல் மருத்துவமனையின் மருத்துவர் யூ.பி சீனிவாசன்.
அதனை தொடர்ந்து அவர் பேசுகையில், ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரம் இருக்கக்கூடிய இந்த காலத்தில், பார்சல் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடும் பழக்கம் அதிகரித்துவிட்டது. முக்கியமாக, பிரியாணி போன்ற உணவுகளை பார்சல் வாங்கி வந்து உண்பது வாடிக்கையாகிவிட்டது. இப்படி, நாம் சாப்பிடும் உணவால், உடல் நலத்திற்கு எவ்வளவு ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பதை நாம் உணர்வது கிடையாது.
சில்வர் பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் பேப்பர்களில், சூடான உணவை வைத்துக்கொடுக்கும் போது, நாம் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு உடலில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. சூடான உணவை, பிளாஸ்டிகில் வைக்கும் போது ரசாயன எதிர்வினையை ஏற்படுத்துகிறது ஏற்படுகிறது. அந்த உணவை நாம் உண்ணும் போது, பார்சலில் இருக்கக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் உணவுடன் சேர்ந்து நம் உடலுக்குள் செல்கிறது.
- எந்த வகை புற்றுநோய்?: நாம் குடிக்கக்கூடிய தண்ணீர், உண்ணும் உணவில் பிளாஸ்டிக் கலந்திருப்பதாக பல ஆய்வுகளும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இவ்வாறு நாம் சாப்பிடும் போது, இரைப்பை புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் என குடல் சம்பந்தப்பட்ட புற்றுநோய்களை தவிர்த்து மற்ற புற்றுநோய்களும் அதிகம் ஏற்படுகின்றது" என்கிறார் மருத்துவர்.
- பார்சல் வாங்கவே கூடாதா?: உணவை பார்சல் செய்வதற்கு பயன்படுத்தப்படும் பொருள், உணவு தரம் (Food Grade) வாய்ந்ததாக இருக்க வேண்டும். அதாவது, உணவுகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத பொருளாக இருக்க வேண்டும் என்றார் மருத்துவர். மேலும், "நாம் வீட்டில் வழக்கமாக பயன்படுத்தும், சில்வர் தட்டுக்கள் கிருமிகளை அளிக்கக்கூடிய தன்மையை கொண்டுள்ளதால் நம் முன்னோர்கள் காலங்களில் இருந்து அவற்றை பயன்படுத்துகிறோம்.
- மலட்டுத்தன்மை?:ஆனால், கடைகளில் பார்சலுக்கு பயன்படுத்தப்படும் கவர்களில், சில்வர் கலர் பூசப்பட்டுள்ளது. கூடுதலாக அலுமினியம் போன்ற திரவங்கள் பூசப்பட்டு வருகிறது. இவற்றில் சாப்பிடுவதால், புற்றுநோய் ஏற்படும் அபாயம் ஒரு பக்கம் இருக்க, மறுபுறத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன" என்றார்.