சென்னை:மனிதனின் உடல் உறுப்புகளில் மிக முக்கியமானது மூளை. ஆறடி ஆள் என்றாலும், ஓரடி விலங்கு என்றாலும் அவற்றை நடமாடச் செய்வது மூளையின் செயல்பாடுதான். அப்படிப்பட்ட மூளையில் அமீபா என்னும் நுண்ணுயிரி ஏற்படுத்தும் மூளைக் காய்ச்சல் தொற்றால் மூளை செயலிழந்து, மனிதனின் உயிரைப் பறிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி அமீபிக் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தை உலுக்கியது. இச்சம்பவத்தை தொடர்ந்து, அமீபிக் மூளைக்காய்ச்சல் குறித்து பதற்ற நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், அமீபிக் மூளைக்காய்ச்சல் நோய் ஒரு அரிய வகை நோய் மற்றும் எளிதில் குணப்படுத்த முடியாத நோய் என ரீலா மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் டாக்டர் ஸ்ரீவித்யா கூறியுள்ளார்.
அமீபா என்றால் என்ன?அமீபா என்பவை நீரில் வாழும் ஒற்றை செல் உயிரினமாகும். இந்த அமீபாக்கள் அதன் வாழ்விடம் மற்றும் தன்மையினால் பல்வேறு வகைகளாக உள்ளன. இதில் நெக்லேரியா ஃபோலேரியா (Naegleria fowleri) வகையான அமீபா இந்த மூளைக்காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்திகிறது. இந்த நோய்த்தொற்று பாதிப்பை ’முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்’ (primary amebic meningoencephalitis) என அழைக்கின்றனர். மேலும், இந்த அமீபாக்கள் உருவத்தை மாற்றிக் கொள்ளும் ஆற்றல் கொண்டதினால், நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் வாய்ப்பு குறைவாக உள்ளாதாகவும் மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.
நோய் தொற்றின் அறிகுறிகள்: இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் தலைவலி, வாந்தி, கண் மங்கலாகுதல், சில நேரத்தில் கண்ணைத் திறக்க முடியாமல் போவது போன்ற அறிகுறிகள் ஐந்து நாட்களில் தென்பட தொடங்குகிறது. இதைக் கண்டறியாமல் விட்டுவிட்டால் இரண்டு வாரத்தில் பாதிப்பு தீவிரம் அடைகிறது. மேலும், நோய் பாதிப்பு தீவரமாகும்போது வலிப்பு நோய் வர அதிக வாய்ப்பு உள்ளதாகவும், அவ்வாறு வலிப்பு நோய் வந்தால் பின் நோய் பாதிப்பின் உச்சகட்டமாக கோமா நிலை ஏற்படுவதுடன் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. எனவே, நோய் பாதிப்பை விரைவில் கண்டறிவது அவசியமானதாக இருக்கிறது.