எஸ்.ஆர்.எம் குளோபல் மருத்துவமனையின் மூத்த உணவியல் ஆலோசகர் யசோதா பொன்னுச்சாமி சிறப்பு பேட்டி சென்னை:செறிவூட்டப்பட்ட அரிசி ஆரோக்கியத்திற்கு நல்லதா, கெட்டதா? அதை உட்கொள்ளலாமா, கூடாதா? என்ற அடிப்படையில் பல்வேறு விவதாங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன. நாடாளுமன்றம் தொடங்கி, சென்னை உயர் நீதிமன்றம் வரை பெரும் பேசுபொருளாக மாறி இருக்கும் இந்த அரிசியை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வது?
சாதாரண அரிசியை அரைத்து, பாலிஷ் செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் நிலையில், அதில் இருக்கும் ஊட்டச்சத்துகள் குறைந்து விடுகின்றன. இதனை உட்கொள்வதால் பெண்கள், மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைப்பது இல்லை எனவும், இதனால் செறிவூட்டப்பட்ட அரிசியை உருவாக்கி, அதை பொது விநியோகத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே நோக்கம் எனவும் மத்திய அரசு கூறுகிறது.
ஆனால், இதை உட்கொள்வதன் காரணத்தால் பலதரப்பட்ட நோயாளிகள், வேறு பல உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகக்கூடும் எனவும், இது குறித்து போதுமான ஆய்வும், விழிப்புணர்வும், அதுதொடர்பான வெளிப்படையான விளக்கமும் வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இது ஒருபக்கம் இருக்க, மாநில அளவில் செறிவூட்டப்பட்ட அரிசியை பொது விநியோகம் செய்ய தமிழ்நாடு அரசும் முடிவு செய்து, அதற்கானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இத்தனை குழப்பங்களுக்கு மத்தியில், பொதுமக்கள் யார் சொல்வது சரி, எதை நம்ப வேண்டும் என புரியாமல் திணறும் நிலை உருாவகி இருக்கிறது. இந்நிலையில், இது குறித்து ஈடிவி பாரத் ஊடகத்திடம் பேசிய எஸ்.ஆர்.எம் குளோபல் மருத்துவமனையின் மூத்த உணவியல் ஆலோசகர் யசோதா பொன்னுச்சாமி, செறிவூட்டப்பட்ட அரிசி நல்லதுதான் என்ற தனது தனிப்பட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல், பாலிஷ்டு அரிசியில் சத்துக்கள் அனைத்தும் போய்விடும் நிலையில், செறிவூட்டப்படும் அரிசியில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துகள் கலக்கப்பட்டு, மக்கள் கைகளில் கொண்டு சேர்க்கப்படுகிறது என்றும், இது பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகுந்த பயனளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன? மேலும், “பாலிஷ்டு அரிசியை அரைத்து மாவாக மாற்றி, அதில் A, B, B12, இரும்பு, போலிக் அமிலம், ஜிங்க் உள்ளிட்ட பல வைட்டமின்களை கலந்து, மீண்டும் அதை அரிசியாக மாற்றி எடுப்பதே செறிவூட்டப்பட்ட அரிசி. அரிசி வாங்கும்போது, அதில் முழுமையாக செறிவூட்டப்பட்ட அரிசி இருக்காது எனவும், சாதாரண பாலிஷ்டு அரிசியில், இந்த அரிசி கலக்கப்பட்டிருக்கும்” எனவும் மருத்துவர் யசோதா பொன்னுச்சாமி கூறியுள்ளார். மேலும், இந்த அரிசி ரேஷன் கடைகள் மூலம் பொது விநியோகம் செய்யப்பட்டு, சாதாரண மக்கள் கையில் சென்றடைந்தால் மிகவும் சிறந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:இளநீரிலும் பூச்சிக்கொல்லியா? உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி கூறுவது என்ன? - Pesticides In Tender Cocoanut