சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. சுதந்திரத்திற்கு முன்னதாக கோலார் தங்கச் சுரங்கத்தில் மக்கள் சந்தித்த பிரச்னைகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவியது. மேலும் தங்கலான் படத்தின் பாடல்கள் மினுக்கி, தங்கலானே ஆகியவை நல்ல வரவேற்பைப் பெற்றது. தங்கலான் படக்குழுவினர் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பா.ரஞ்சித் ஆகியோர் தென்னிந்தியா முழுவதும் தீவிர புரோமோஷனில் ஈடுபட்டனர்.
மேலும், கோலிவுட் பிரபல நடிகரகள் சூர்யா, தனுஷ் ஆகியோர் தங்கலான் ரிலீஸை முன்னிட்டு நடிகர் விக்ரமுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தங்கலான் திரைப்படம் இன்று (ஆக.15) வெளியான நிலையில், முதல் நாள் டிக்கெட் முன்பதிவிலும் சாதனை படைத்தது.