சென்னை: ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த செப்.5ஆம் தேதி வெளியான திரைப்படம் ’கோட்’ (Greatest Of all time). யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள கோட் படத்தில் பிரசாந்த், சினேகா, பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மாபெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட கோட் திரைப்படம் விஜய் திரை வாழ்வில் அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட திரைப்படமாக அமைந்தது.
இந்நிலையில் கோட் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. கோட் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ஜீவனாக விஜய் மிரட்டியிருந்தார் என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பாராட்டி வந்தனர். அதேபோல், கோட் திரைப்படம் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது. பிரபல சினிமா வர்த்தக நிறுவனம் சாக்னில்க் வெளியிட்ட அறிக்கையின் படி, கோட் திரைப்படம் தமிழ்நாட்டில் 215 கோடிக்கு மேல் வசூல் செய்து லியோ பட வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
அதேபோல் ’கோட்’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏஜிஎஸ் வெளியிட்டுள்ள தகவலின் படி கோட் திரைப்படம் உலக அளவில் 450 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்தியாவில் மட்டும் 292.25 கோடி வசூல் செய்துள்ளது. அதேபோல் வெளிநாட்டில் 155.75 கோடி வசூல் செய்துள்ளது.