சென்னை: சீனா பாக்ஸ் ஆபிஸில் விஜய் சேதுபதி நடித்துள்ள ’மகாராஜா’ திரைப்படம் வெற்றி நடைபோடுகிறது. இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து அவரது 50வது திரைப்படமாக கடந்த ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'மகாராஜா'. இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன், அபிராமி, முனிஷ்காந்த், நட்டி, சிங்கம் புலி, அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
'மகாராஜா' திரையரங்குகளில் வெளியானது முதல் அனைவரது பாராட்டையும் பெற்றது. சாதாரண பழி வாங்கும் கதையை நான் லீனியர் (Non linear) முறை திரைக்கதையுடன் விறுவிறுப்பாக சொன்ன விதத்தில் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் பாராட்டை பெற்றார். இதுமட்டுமின்றி மகாராஜா படத்தில் நடிகர் சிங்கம் புலியின் நடிப்பு இப்படத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. ஒவ்வொரு படத்திலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து மக்களை மகிழ்வித்து வந்த சிங்கம் புலி, இப்படத்தில் எவரும் எதிர்பாராத வகையில் முக்கியமான கதாபாத்திரத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
திரையரங்குகளில் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த மகாராஜா திரைப்படம் ஓடிடியிலும் சாதனை படைத்தது. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிக பார்வையாளர்கள் பார்த்த இந்திய படங்கள் வரிசையில் முதல் இடம் பிடித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த நவம்பர் 29ஆம் தேதி சீனாவில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மகாராஜா திரைப்படம் வெளியானது.
இதையும் படிங்க: திரைப்படமாக உருவாகும் "காந்தக்கண்ணழகி சில்க் ஸ்மிதா"வின் வாழ்க்கை வரலாறு!
அங்கு மகாராஜா திரைப்படம் வெளியான 3 நாட்களில் 25 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 திரைப்பட வசூல் சாதனையை முறியடித்துள்ளது. மேலும் மகாராஜா திரைப்படம் பல்வேறு இந்திய திரைப்படங்களின் வசூல் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக தங்கல் (1200 கோடி), Secret superstar (863 கோடி), அந்தாதூன் (333 கோடி), பாகுபலி 2 (80 கோடி) உள்ளிட்ட பல படங்கள் சீனாவில் வசூலை குவித்துள்ளது. இந்த வரிசையில் விரைவில் மகாராஜா திரைப்படமும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.