சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய்யின் 68வது திரைப்படமான 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (GOAT) படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னை, புதுச்சேரி, தாய்லாந்து, துருக்கி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்தது.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக, ஒரு வார காலம் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அங்கு நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக விஜய் நேற்று மாலை விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றடைந்தார்.
அப்போது நடிகர் விஜய்க்கு விமான நிலையத்தில் அவரது ரசிகர்கள் ஏராளமானோர் ஆரவாரம் செய்து வரவேற்பு அளித்தனர். விஜய்க்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் காவலன் படப்பிடிப்பிற்காக 9 ஆண்டுகளுக்கு முன் கேரளா சென்றதாகக் கூறப்படுகிறது.
மேலும், தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை விஜய் தொடங்கியுள்ள நிலையில், இந்த படப்பிடிப்பு முடிவதற்குள் கேரளாவில் உள்ள ரசிகர் மன்றத் தலைமை நிர்வாகிகளையும் சந்திக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் நேற்று கேரளா புறப்பட்டுச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சூர்யாவின் மிரட்டலான தோற்றத்தில் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளுடன் வெளியானது கங்குவா டீசர்!