சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் ’விடுதலை 2’ படக்குழுவினர் சென்றனர். விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் 8 நிகழ்ச்சி 65 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இந்த பிக்பாஸ் சீசன் அவ்வப்போது விறுவிறுப்பாக செல்லும் நிலையில், சில சமயம் எந்த வித சுவாரஸ்யமும் இல்லாமல் நகர்வதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த 7 சீசனாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் டபுள் எவிக்ஷனில் ஆனந்தி, சாச்சனா வெளியேற்றப்பட்டனர். இறுதிக்கட்டத்தை நோக்கி இந்த பிக்பாஸ் சீசன் 8 நகர்ந்து வரும் நிலையில், இந்த வாரம் யார் வெளியேறுவார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் விடுதலை 2 படக்குழுவினர் நுழைந்தனர். வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ’விடுதலை 2’ திரைப்படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ப்ரமோஷனுக்காக விடுதலை 2 படத்தின் நடிகர்கள் சூரி, மஞ்சு வாரியர், கென் கருணாஸ் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் நேற்று (டிச.13) வந்தனர். பிக்பாஸ் வீட்டிற்குள் விடுதலை 2 பட நடிகர்கள் சர்ப்ரைஸாக நுழைந்தனர். இவர்களை பார்த்த பிக்பாஸ் போட்டியாளர்கள் கத்தி கூச்சலிட்டனர். பின்னர் பிக்பாஸ் போட்டியாளர்களிடம் சூரி கலகலப்பாக உரையாடினார்.
இதையும் படிங்க: நல்ல ரொமான்டிக் காமெடி திரைப்படம்; வரவேற்பைப் பெறும் சித்தார்த் நடித்துள்ள 'மிஸ் யூ' - MISS YOU REVIEW
இதனைத்தொடர்ந்து மஞ்சு வாரியர் பிக்பாஸ் வீட்டை சுற்றி பார்த்து, அன்ஷிதா உள்ளிட்ட பிக்பாஸ் போட்டியாளர்களிடம் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார். அதேபோல் கென் கருணாஸ், சவுந்தர்யாவை பாராட்டினார். சூரி, முத்துக்குமரன் இடையே உரையாடல்கள் கலகலப்பாக இருந்தது. இதனைத்தொடர்ந்து மஞ்சு வாரியர் வேட்டையன் படத்தின் ’மனசிலாயோ’ பாடலுக்கு பிக்பாஸ் போட்டியாளர்களுடன் நடனமாடினார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. முன்னதாக தீபாவளிக்கு ’அமரன்’ திரைப்படம் வெளியான போது நடிகர் சிவகார்த்திகேயன் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.