சென்னை:தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர்களின் சங்கத்திற்கு 2024 - 2026ஆம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல், வரும் 17ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் நடிகரும், தற்போதைய இந்த சங்கத்தின் தலைவருமான ராதாரவி மீண்டும் போட்டியிடுகிறார். காலில் அடிபட்டு நடக்க முடியாத நிலையிலும், சமீபத்தில் தனது வேட்புமனுவை அவர் தாக்கல் செய்தார்.
தற்போது, துணைத் தலைவராக இருக்கும் ராஜேந்திரன் தலைமையில், ராதாரவிக்கு எதிராக ஒரு அணியினரும் களம் இறங்குகின்றனர். மொத்தம் 23 பதவிகளுக்கு இந்த தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், ராதாரவியை எதிர்த்து தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ராஜேந்திரன், நேற்று (பிப்.28) மனுத் தாக்கல் செய்தார்.
அதற்கு பிறகு ராஜேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, தற்போதைய தலைவர் ராதாரவி மற்றும் கதிரேசன் உள்ளிட்டவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதில், குறிப்பாக தற்போதைய நிர்வாகத்தினரால் உறுப்பினர்கள் அசிங்கப்படுத்தப்படுகின்றனர்.
அவர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை. உறுப்பினர்களை இழிவாகப் பார்க்கின்றனர் என்பது வேதனை அளிக்கிறது. நிர்வாகிகள் மட்டுமல்லாமல், சங்கத்தில் மேலாளராகப் பணியாற்றுபவரும் உறுப்பினர்களை தரக்குறைவாக நடத்துகிறார் என்று குற்றம் சாட்டினர்.
மேலும், சங்கத்தின் நிதி முறைகேடாக பயன்படுத்தப்படுவதாக தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டே வருகிறோம் என்றும் கூறினார். இதுகுறித்து தலைவர் ராதாரவியிடம் பலமுறை கூறியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். இந்த நிலையில், தற்போதைய நிர்வாகத்தால் நீக்கப்பட்டு இருக்கும் பின்னணிப் பாடகி மற்றும் தங்கள் தங்கத்தின் முன்னாள் உறுப்பினரான சின்மயி, மீண்டும் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்படுவார் என ராஜேந்திரன் உறுதியளித்தார்.
அத்துடன் தற்போது உறுப்பினர்களாக சேர்வதற்கு இரண்டு லட்சம் ரூபாய் பணம் செலுத்த வேண்டியுள்ளது. அதை நாங்கள் குறைப்போம் மற்றும் உறுப்பினர்கள் இறந்து விட்டால், அவர்களுடைய வாரிசுகளை உறுப்பினராக சேர்ப்பதற்கு தற்போது பணம் பெறப்பட்டு வருகிறது. அதை நாங்கள் நீக்கி, இலவசமாக உறுப்பினராக சேர்த்துக் கொள்வோம். மேலும், உறுப்பினர்களுக்கு மதிய உணவு சங்கத்தில் வழங்கப்படும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:வேட்டையன் படப்பிடிப்பு தீவிரம்: போலீஸ் உடையில் மிரட்டும் ரஜினிகாந்த்! ரசிகர்களுக்கு கையசைத்த வீடியோ வைரல்!