சென்னை:தமிழ்நாடு சின்னதிரை இயக்குநர்கள் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், 2024-26ஆம் ஆண்டிற்கான தேர்தல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சாலிகிராமத்தில் உள்ள சின்னதிரை இயக்குநர்கள் சங்க அலுவலகத்தில், தேர்தல் அதிகாரி பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.
மொத்தம் ஆயிரத்து 201 உறுப்பினர்கள் உள்ள நிலையில், 585 வாக்குகள் பதிவாகின. தலைவர் பதவிக்கு 'சகோதரர் அணி' சார்பில் மங்கை அரிராஜனும், 'உழைப்பாளர் அணி' சார்பில் எட்வின் ராஜ் என்பவரும், தளபதியும் என்பவரும் போட்டியிட்டனர். இதில் மங்கை அரிராஜன், 310 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
மேலும், பொதுச் செயலாளர் பதவிக்காகப் போட்டியிட்ட உழைப்பாளர் அணியைச் சேர்ந்த ஆர்.அரவிந்தராஜ் என்பவர் 316 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதேபோல், பொருளாளராக அறந்தாங்கி சங்கர் 296 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். துணைத் தலைவர் பதவிக்காக எஸ்.வி.சோலைராஜா 258 வாக்குகளும், குட்டி பத்மினி 256 வாக்குகளும் பெற்று துணைத் தலைவர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும், இணைச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்டவர்களில் ஆதித்யா என்பவர் 296 வாக்குகளும், விக்ராந்த் என்பவர் 278 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில், செயற்குழு உறுப்பினர்கள் குறித்த முடிவுகளும் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:பழம்பெரும் நாடக நடிகர் ஆர்.கோபால கிருஷ்ணன் காலமானார்!