சென்னை: ’கங்குவா’ திரைப்பட ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி, நட்டி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்த கங்குவா திரைப்படம் கடந்த நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.
கிட்டதட்ட இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா திரைப்படம் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியான நிலையில், எதிர்மறை விமர்சனங்களை பெற்றது. நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கங்குவா குறித்து அதிகமாக மீம்ஸ் பதிவிட்டு வந்தனர். கங்குவா படத்தின் பின்னணி இசை இரைச்சலாக உள்ளதாக ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர். இதனைத்தொடர்ந்து படக்குழுவினர் சார்பில் திரையரங்குகளில் இரைச்சல் பிரச்சனை சரி செய்யப்பட்டதாக விளக்கம் அளித்தனர்.
மேலும் நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கங்குவா படத்தில் முதல் அரை மணி நேரம் தவிர படம் நன்றாக உள்ளதாகவும், தேவை இல்லாமல் சமூக வலைதளங்களில் நெகடிவ் விமர்சனங்கள் பரப்பப்படுவதாக கூறியிருந்தார். இது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுமட்டுமின்றி கங்குவா திரைப்படம் திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தும் என படக்குழு எதிர்பார்த்த நிலையில், எதிர்மறை விமர்சனங்களால் வசூலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.