சென்னை: நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் ’மாமன்’ படத்தில் லப்பர் பந்து நடிகை இணைந்துள்ளார். நடிகர் சூரி ’வெண்ணிலா கபடி’ குழு படத்தின் மூலம் பிரபலமானார். அந்த படத்தில் பரோட்டா நகைச்சுவை காட்சி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த காட்சியில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். இதனைத்தொடர்ந்து நான் மகான் அல்ல, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், அரண்மனை 2 என பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக உருவெடுத்தார்.
இதனைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கிய ’விடுதலை’ படத்தில் சூரி கதாநாயகனுக்கு நிகராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த திரைப்படம் சூரியின் திரை வாழ்க்கையை மாற்றியது. விடுதலை படத்திற்கு பிறகு நடிகர் சூரிக்கு பல்வேறு திரைப்படங்களில் ஹீரோ வாய்ப்பு தேடி வந்ததாகவும், ஆனால் தனித்துவமான கதைகளில் மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
விடுதலை படத்தை தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கிய ’கருடன்’ படத்தில் நடித்தார். இந்த படத்திலும் சூரியின் நடிப்பு பெரும் பாராட்டை பெற்றது. இந்நிலையில் விலங்கு வெப் சீரியஸ் மூலம் பிரபலமான பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி நடிக்கிறார். விலங்கு வெப் சீரியஸில் நடிகர் விமல் நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.