சென்னை: ராகவா லாரன்ஸ் இயக்கும் ’காஞ்சனா 4’ படத்தில் பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ராஜ்கிரண் நடித்த திரைப்படம் ’முனி’. இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது. முனி திரைப்படம் ஹாரர் காமெடி திரைப்படமாக உருவானது. அதுமட்டுமின்றி முனி படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிகமாக பேய்ப் படங்கள் வரத் தொடங்கியது. இதற்கு பிறகு முனி படத்தின் இரண்டாம் பாகம் ’காஞ்சனா’, ’காஞ்சனா 2’, ’காஞ்சனா 3’ என பல படங்களை ராகவா லாரன்ஸ் உருவாக்கினார்.
அனைத்து திரைப்படங்களும் நல்ல வசூலை பெற்றது. காஞ்சனா திரைப்படத்தில் திருநங்கையாக சரத்குமார் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. காஞ்சனா வெளியான காலகட்டத்தில் பல இயக்குநர்கள் ஹாரர் காமெடி படங்களை உருவாக்கினர். அதற்கு சிறந்த உதாரணம் சுந்தர்.சி இயக்கிய அரண்மனை படத்தை கூறலாம். அரண்மனை திரைப்படம் இதுவரை 4 பாகங்கள் உருவாகியுள்ளது.
ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவிற்கு ட்ரெண்ட் செட்டர் ஆக இருந்தார். இந்நிலையில் காஞ்சனா 4 திரைப்படம் உருவாகிறது. ராகவா லாரன்ஸ் இயக்கும் ’காஞ்சனா 4’ படத்தில் பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படத்தில் பூஜா ஹெக்டே பேயாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகை பூஜா ஹெக்டே ஜீவா நடித்த ’முகமுடி’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.