சென்னை: தமிழ் சினிமாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை தத்ரூபமாக திரையில் காட்டுபவர் மாரி செல்வராஜ். இயக்குநர் ராமிடம் சில படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி, பின்னர் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பரியேறும் பெருமாள் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன், நெல்லையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது.
இந்த படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்னர் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக பார்க்கப்பட்ட மாரி செல்வராஜ், வடிவேலு, ஃபகத் ஃபாசில், உதயநிதி உள்ளிட்டோர் நடித்த மாமன்னன் படத்தை இயக்கினார். ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை இப்படம் உரக்க பேசிய விதத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது வாழை என்ற படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது.