சென்னை: 'விடாமுயற்சி' திரைப்படத்தில் அஜித்குமார் மூன்று கெட்டப்களில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படம் 'விடாமுயற்சி'. கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கிய விடாமுயற்சி படப்பிடிப்பு, பின்னர் பல்வேறு காரணங்களுக்காக தள்ளிப் போனது. பயணம் சம்பந்தபட்ட கதையான விடாமுயற்சி படப்பிடிப்பு அதிகமாக வெளிநாட்டில் நடைபெற்றது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், வரும் பொங்கல் பண்டிகைக்கு விடாமுயற்சி திரைப்படம் வெளியாகிறது. டீசரில் வசனம் இல்லாமல் பல ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அஜித்தும், த்ரிஷாவும் வெளிநாட்டில் காரில் சாலைப் பயணம் செல்லும் போது ஒரு கேங்ஸ்டர் த்ரிஷாவை கடத்துவதாகவும், அதன் பின் அந்த கேங்ஸ்டர் கூட்டத்தை எதிர்கொண்டு அஜித் த்ரிஷாவை எவ்வாறு காப்பாற்றுகிறார் என்பதே கதை என தகவல் வெளியாகியுள்ளது. இது பிரெஞ்சு படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது.
இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு பேங்காக்கில் நடைபெற்று வருகிறது. அஜித், த்ரிஷா இருவருக்குமான பாடல் காட்சி கல்யாண் மாஸ்டர் நடன வடிவமைப்பில் நடைபெற்று வருகிறது. வரும் பொங்கல் பண்டிகைக்கு விடாமுயற்சி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டப்பிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஒருபுறம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.