சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்நிலையில் அரசியலில் ஈடுபட உள்ளதாகக் கூறி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். இதன் காரணமாக விஜய் இனி படங்களில் நடிக்கப் போவது இல்லை என்று அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகர் விஜய் தனது அம்மா ஷோபாவுக்காக சென்னையில் மிகப் பெரிய சாய்பாபா கோயில் ஒன்றைக் கட்டியுள்ளார் என்று தகவல் வெளியானது.
இந்த தகவல் குறித்து விசாரித்த போது, விஜய் கிறிஸ்தவர் என்றாலும் அம்மா மீது மிகவும் அன்பு கொண்டவர். கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய நடிகர் விஜய் அதே கையோடு இந்த சாய்பாபா கோயிலைச் சென்னை கொரட்டூர் பகுதியில் கட்டியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து மும்பையில் இருக்கும் சீரடி சாய்பாபா கோயிலுக்குச் சென்று வருவது வழக்கமாகக் கொண்டுள்ளார் விஜய். அதன் பின்னணி குறித்துப் பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
சீரடியில் இருக்கும் கோயிலைப் போல் தான் அமைக்க விரும்பிய நிலையில், கொரட்டூர் பகுதியில் சாய்பாபா கோயிலைக் கட்டியுள்ளார். பின்னர் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. அதில் தமிழக வெற்றிக் கழக ஆலோசகர் விஜய் ரசிகர் மன்ற மேலாளருமான புஸ்ஸி ஆனந்த், விஜய்யின் தாயார் ஷோபா மற்றும் விஜய் ஆகியோர் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தைச் சிறப்பாக நடத்தினர். அதற்கான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.