சென்னை: 'லவ் டுடே' படத்தின் மூலம் நடிகராகவும் மக்களிடையே வரவேற்பு பெற்ற இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ’டிராகன்’. ’ஓ மை கடவுளே’ பட இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கௌதம் மேனன், மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார் ஜார்ஜ் மரியம், வி.ஜே.சித்து, ஹர்ஷத் கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
‘டிராகன்’ திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (பிப்.21) திரையரங்குகளில் வெளியான டிராகன் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
முதல் வார இறுதியில் மூன்று நாட்களில் டிராகன் திரைப்படம் வசூல் செய்துள்ள தொகையை ஏஜிஎஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிப்ரவரி 21ஆம் தேதி வெளியான ‘டிராகன்’ படத்தை ஏஜிஎஸ் நிறுவனமே உலகமெங்கும் அந்நிறுவனமே விநியோகித்தது. முதல் நாளைக் காட்டிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திரையரங்கில் கூட்டம் அதிகரித்தது.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பகிர்ந்துள்ள எக்ஸ் தள பதிவில், ‘டிராகன்’ படம் முதல் மூன்று நாட்களில் உலக அளவில் ரூ.50.22 கோடி வரை வசூல் செய்துள்ளது. முதல் வார இறுதியில், தமிழகத்தில் மட்டும் 24.9 கோடி, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 6.25 கோடி, கேரளா, கர்நாடகா மற்றும் வட இந்தியாவில் ரூ.4.37 கோடி, வெளிநாடுகளில் ரூ.14.7 கோடியை வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.