சென்னை: புளூ ஸ்டார் திரைப்பட இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி மேடையில் பேசிய இயக்குநர் பா. ரஞ்சித், “இந்த படம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்த பல படங்களுக்கு சென்சாரில் பிரச்னை வந்திருக்கிறது. ஆனால் பின்வாங்கியது இல்லை. படத்தின் வசனங்கள் நன்றாக வந்திருக்கிறது. அற்புதமான ஒரு படத்தை தமிழ் சினிமாவிற்கு கொடுத்திருக்கிறோம் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம்.
புளூ ஸ்டார் படத்திற்கு பெரிய முகவரி இசைதான். இன்றைக்கு முக்கியமான நாள். நாம் வீட்டில் யாரும் கற்பூரம் ஏற்றவில்லை என்றால், எல்லாரும் தீவிரவாதிகள்தான். அந்த அளவிற்கு இன்றைக்கு பயங்கரமாக போய்க்கொண்டு இருக்கிறது. தீவிரமான காலகட்டத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் 5, 10 ஆண்டுகளில் நாம் எவ்வளவு மோசமான ஒரு இந்தியாவில் இருக்கப் போகிறோம் என்ற பயம் இருந்து கொண்டிருக்கிறது.
பயம் மிகுந்த காலகட்டத்தில் நுழைவதற்கு முன்னர், நம்மை சரி செய்வதற்கு, நம் மனதை பண்படுத்துவதற்கு, நம் மூளையில் ஏற்றி வைத்து இருக்கும் பிற்போக்குத் தனத்தையும், மதவாதத்தையும் அழிக்கும் கருவியாக சினிமாவைப் பயன்படுத்துகிறோம். மக்களிடம் எளிதாகச் சென்றடையக் கூடியது இந்த சினிமா. நம்பிக்கையுடன்தான் வேலை செய்து வருகிறோம். இந்தியாவை மோசமான காலகட்டத்தில் தள்ளி விடாமல் இருக்க நம்மால் முடிந்ததை முழுக்கச் செய்வோம்” என்றார்.