திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக இன்று (ஜனவரி 17) வருகை தந்த இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
முன்னதாக கோயிலுக்கு வந்த இளையராஜாவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, காந்திமதி அம்பாள் சன்னதி, சுவாமி நெல்லையப்பர் சன்னதி மற்றும் பல்வேறு பகுதிகளில் சுவாமி தரிசனம் செய்த இளையராஜா, தொடர்ந்து சிவபெருமான் திரு நடனமாடிய பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிர சபையை சுற்றி வலம் வந்து சுவாமி தரிசனம் செய்தார்.
அதற்காக, நெல்லையப்பர் கோயிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதற்கிடையே, கோயிலில் இருந்த பக்தர்களும், பொதுமக்களும் இளையராஜாவுடன் புகைப்படம் எடுக்க முயன்றனர். இதனால், நெல்லையப்பர் கோயிலில் சிறிது பரபரப்பு காணப்பட்டது.