சென்னை: தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு 'கற்பு பூமி' என்ற படம் இயக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டியோவில் நடைபெற்றது. நேசம் முரளி எழுதி, இயக்கி, தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், நக்கீரன் இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால் மற்றும் தமிழ்த் திரைப்பட சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில், படத்தின் இயக்குநர் நேசம் முரளி படத்தில் 'கண்ணகி சிலை' உள்ளது என்பதாலும் படத்தின் தலைப்பு 'கற்பு பூமி' என்று உள்ளது என்பதாலும் படத்தின் தலைப்பிற்கு சென்சார் போர்டு அனுமதி அளிக்கவில்லை என்பதால் படத்தின் பாடலை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், "படத்தைத் தானே சென்சார் போர்டு வெளியிடக் கூடாது என்றனர் படத்தின் பாடலை வெளியிடுவதற்கு சென்சார் போர்டு என்ன சொல்ல வேண்டும். பாடல் வெளியீட்டு விழா தானே பாடலை வெளியிடுவோம். காட்சிகளைத் தானே வெளியிடக் கூடாது கேசட்டுகளை வெளியிடலாமே" என கூறி படத்தின் பாடல் வெளியிடப்பட்டது.
இதன் பின்னர் விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, "இந்த அராஜகத்திற்குப் பலியான முதல் இயக்குநர் நான். உண்மை சம்பவத்தை எடுத்தால் மக்கள் விரும்புகிறார்கள் என்று, குற்றப் பத்திரிகை படத்தை எடுத்தேன். அப்போது ஒரு உண்மையைத் தெரிந்து கொண்டேன் இந்தியாவில் உண்மையைச் சொல்லக் கூடாது என்று. எவ்வளவு அபத்தம், ஆபாசமும் சொல்லலாம் ஆனால் உண்மையைச் சொல்லக் கூடாது.
இவர்கள் போன்றோருக்கு முன்னுதாரணம் திராவிடம்தான். பராசக்தி படத்திற்குப் பின்னால், 'சென்சார் இல்லை என்றால் மூன்று படத்திலேயே திராவிட நாடு வாங்கிடுவேன்' என்று அறிஞர் அண்ணா சொன்னார். எங்கேயும் அராஜகம் அதிகரிக்கும் போது அதற்கான புரட்சி தொடங்கிவிடும்.
அதிகாரிகளின் வேலை அதிகாரத்தையும் ஆட்சியையும் காப்பாற்றுவதல்ல மக்களைக் காப்பாற்றுவதுதான். ஆனால் இப்போது அதிகாரத்தையும் ஆட்சியையும் காப்பாற்றுவதே அவர்களின் வேலையாகி விட்டது. படைப்பாளிகளை நசுக்காதீர்கள் எல்லோரும் அடங்கிப்போக மாட்டார்கள். ஒருநாள் பிரளயமாக மாறும். சட்டத்திற்குட்பட்டு நீங்கள் வேலை செய்ய வேண்டும். திரைப்படம் மக்களைக் கெடுக்கக் கூடாது என்ற நோக்கத்தில் தான் நீங்கள் வேலை செய்ய வேண்டும் ஆட்சியைக் காப்பாற்றும் நோக்கில் அல்ல" என்று தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாகப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர், "சென்சார் போர்டில் அரசியல்வாதிகளை நியமிக்கக் கூடாது. சென்சார் போர்டில் உறுப்பினர் என்பது ஆறுதல் பரிசாக மாறிவிட்டது. சினிமாவிற்கு சம்பந்தம் இல்லாத ஆட்களைக் கட்சியில் இருக்கிறார் என்பதற்காக சென்சார் போர்டில் நியமித்துள்ளனர். இது தேவையில்லாத பிரச்சினையை உருவாக்கும்" என்று பேசினார்.
இதையும் படிங்க:'ஒரு கிடாவின் கருணை மனு' பட இயக்குநருடன் இணையும் நடிகர் யோகி பாபு!