சேலம்:சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை மூலம் 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிறம் பாசன வசதி பெறுகிறது. அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால் பருவ மழை எதிர்நோக்கி ஜூன் 12ஆம் தேதி குறுவைச் சாகுபடிக்குத் தண்ணீர் திறக்கப்படும்.
குறுவைச் சம்பா தாலடி பயிர்கள் என 230 நாட்களுக்கு 330 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும் பாசனப்பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து பாசன தேவைக்கேற்ப நீர் கூடுதலாகவும் குறைவாகவும் திறக்கப்படும். ஆனால் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 43.71 அடியாகவும் நீர் இருப்பு 14 டிஎம்சி ஆகவும் உள்ளது.
இதனா இருப்பு உள்ள நீரில் 4.5 டிஎம்சி தண்ணீர் மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் 9.5 டிஎம்சி தண்ணீரை மீன்வளத்தைப் பாதுகாக்கவும் குடிநீர் திட்டங்களுக்கும் இருப்பு வைக்க வேண்டும். இங்கிருந்து 22 மாவட்டங்களுக்குக் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
தண்ணீர் திறப்பு இல்லை:அணைக்கு நீர் வரத்தும் போதிய அளவு இல்லாத காரணத்தினால் நடப்பாண்டில் குறித்த நாளான இன்று ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து குறுவைச் சாகுபடிக்குத் தண்ணீர் திறக்கப்படவில்லை என நீர்வளத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் பருவமழை கை கொடுத்தால் ஜூலை இறுதியில் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாச நிறத்திற்குத் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. அதே போல் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி கிருஷ்ணா ராஜசாகர் அணைகள் நிரம்பிய பிறகு தமிழகத்திற்குத் தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மேட்டூர் அணையின் 91 ஆண்டுக் கால வரலாற்றில் ஜூன் 12-ம் தேதியில் 19 ஆண்டுகள் மட்டுமே தண்ணீர் டெல்டா பாசனத்திற்குக் குறித்த தேதியில் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பும் நீர் வரத்தும் திருப்திகரமாக இருந்த காரணத்தால் விவசாயிகள் வேண்டுகோளை ஏற்று ஜூன் 12-ம் தேதிக்கு முன்பாக 11 ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மற்ற ஆண்டுகளில் காலதாமதமாகத் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்பொழுது தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும் கர்நாடக அணைகளில் குறைந்த அளவிலே நீர் வரத்து உள்ளது. தற்போது மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 390 கன அடியாகக் குறைந்துள்ளது.
குடிநீர் தேவைக்காகத் திறக்கப் படும் தண்ணீர் அளவு விநாடிக்கு 2100 கன அடியில் இருந்து தற்பொழுது 1500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த நேரத்தில் மேட்டூர் அணையில் இருந்து குறுவைச் சாகுபடிக்குத் தண்ணீர் திறக்கப்படமுடியவில்லை. இதன் காரணமாக மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:ஆகஸ்ட் 15-ல் மேட்டூர் அணையைத் திறக்க தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் குழு அரசுக்கு பரிந்துரை!