சென்னை: தமிழ் சினிமாவில் பெண் பாடலாசிரியர்கள் மிகக் குறைவாக உள்ள நிலையில், தனது தனித்துவமிக்க வரிகள் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் பாடலாசிரியர் உமாதேவி. மெட்ராஸ் படத்தில் தொடங்கிய இவரது திரைப் பயணம், கபாலி படத்தில் மாயநதி, காலா படத்தில் கண்ணம்மா பாடல் என தற்போது தங்கலான் மினுக்கி பாடல் வரை தொடர்கிறது. இந்நிலையில் தங்கலான் படம் குறித்தும், தனது திரைப் பயணம் குறித்தும் நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பகிர்ந்து கொண்டார்.
அப்போது பேசியது, “பத்து ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றி வந்தேன். அது ஒரு உற்சாகமான விஷயமாக இருந்தது. அடுத்த கட்டத்திற்கு போக வேண்டும் என்று தற்போது பணியில் இருந்து விலகி, முழுநேர பாடல் எழுதும் பணிகளில் ஈடுபட்டுள்ளேன்" என்றார்.
பாடலாசிரியர் உமாதேவி தான் எழுதிய முதல் பாடல் குறித்து பேசுகையில், ”மெட்ராஸ் படத்தில் முதல்முறையாக பா.ரஞ்சித் இயக்கத்தில் பாடல் எழுதினேன். அப்போது அவர் எழுதிய கவிதைகள் குறித்து நிறைய குறிப்பிட்டு பேசினார். மெட்ராஸ் படத்தில் ’நான் நீ’ பாடலை முதல் முயற்சியாக தான் எழுதினேன். பாடல் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்றது. பாடல் வருமா என்று தெரியவில்லை என்று பா.ரஞ்சித் என்னிடம் சொன்னார். ஆனால் பாடல் படத்தில் இடம்பெற்று, வரவேற்பும் பெற்றது” என்றார்.
அதனைத்தொடர்ந்து தமிழ் சினிமா பயணம் குறித்து பேசுகையில், “என்ஜிகே, கபாலி உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் எழுதினேன். பா.ரஞ்சித் உடனான புரிதல் தான் அவருடைய எல்லா படங்களிலும் பாடல் எழுதும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது. தற்போது தங்கலான் வரை கொண்டுவந்துள்ளது என நினைக்கிறேன்” என கூறினார்.
மேலும் பாடல் வரிகளில் தமிழ் இலக்கியத்திற்கு உள்ள முக்கியத்துவம் குறித்து பேசுகையில், ”தமிழ் இலக்கியம் படித்ததும், தொடர் வாசிப்பும் தான் என்னை இயங்க வைக்கிறது. மகளிர் மட்டும் படத்தில் 'வாடி ராசாத்தி' பாடல் நமது வாழ்வியலில் இருந்து எழுதியதுதான். தமிழ் இலக்கியங்கள் ஆணின் வெற்றியை மட்டும் தான் புகழ்ந்து பேசியுள்ளது. பெண்ணின் வலிமையை பாடலில் சொல்லும் போது இலக்கியம் எனக்கு உறுதுணையாக இருந்துள்ளது. தமிழ் மொழியின் பெருமையே புதிய சொற்களை உருவாக்கும் திறன் தான்” என்றார்.