சென்னை: லெமன் லீப் கிரியேஷன்ஸ் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் பா.ரஞ்சித் தயாரிப்பில், இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் நடிகர்கள் அசோக் செல்வன், ஷாந்தனு, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம், புளூ ஸ்டார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இசை வெளியீட்டு விழா நிகழ்வில் பேசிய ராப் பாடகர் அறிவு, “ஒப்பாரி பாடலே ராப் மாதிரிதான் என்று நினைக்கிறேன். இந்த படத்தில் பாட வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. அரக்கோணத்தைச் சேர்ந்தவன் நான். அரக்கோணத்தில் எங்கு பார்த்தாலும் அம்பேத்கர் சிலை இருக்கும். மகிழ்ச்சிதான் பெரிய புரட்சி என்று நினைக்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்களிடம் இருந்து பிடுங்கப்பட்டதே மகிழ்ச்சிதான்” என்று கூறினார்.
பின்னர் பேசிய நடிகர் ஷாந்தனு, “முதல் மேடையில் இருந்த பதட்டம் இப்போதும் இந்த மேடையில் பேசும்போது இருக்கிறது. வெற்றி வருவதற்கு முன் அந்த பதட்டம் எல்லாருக்கும் இருக்கும் என்றும் நம்புகிறேன். தமிழ்நாட்டில் பல லட்சம் பேர் நம்பிக்கையுடன் கிரிக்கெட் ஆடுகிறார்கள். பல லட்சம் பேர் அஸ்வின், நடராஜ் மாதிரி ஆகி விட மாட்டோமா என்று நம்பி போராடுகிறார்கள்.
லட்சம் பேரில் நானும் ஒருவனாக அந்த கனவோடு இருக்கிறேன். அந்த வகையில், என்னை நிரூபிக்கும் படமாக ’புளூ ஸ்டார்’ இருக்கும். உங்கள் இயக்கத்தில், தயாரிப்பில் ஒரு படம் பண்ண வேண்டும் என்று பா.ரஞ்சித்திடம் கேட்டிருந்தேன். அந்த வாய்ப்பை சரியான ஒரு படத்தில் கொடுத்திருக்கிறார்” என்றார்.