சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் 7ம் ஆண்டு தொடக்க விழா இன்று (பிப்.21) சென்னையில் உள்ள கமல்ஹாசனின் அலுவகத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மநீம தலைவர் கமல்ஹாசன் கொடி ஏற்றி வைத்து, தொண்டர்கள் முன் உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், மநீம ஏழாவது ஆண்டு தொடக்க விழா நடைபெறுகிறது. எங்கள் கடமைகளை நாங்கள் நினைவு படுத்திக்கொள்ளும் விழா தானே தவிர, நாங்கள் யார் என்பதை உலகிற்கு காட்டும் விழா அல்ல. அதனால் தான் இவ்வளவு எளிமையாக கொண்டாடுகிறோம் என்றார்.
பின்னர் கூட்டணி மற்றும் விஜயின் அரசியல் குறித்து செய்தியாளர் கேள்விக்கு, நல்ல செய்தி உடனே வந்து விடாது. கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. நடிகர் விஜய் முழுநேர அரசியல்வாதியாக வருவதாக அறிவித்துள்ளது அவர் இஷ்டம். அது அவர் பாணி. இது என் பாணி என்றார்.
அரசியலில் விஜயுடன் இணைய திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு, விஜய் அரசியலுக்கு வந்த பொழுது முதல் வரவேற்பு குரல் என்னுடையதுதான். கடந்த 6 ஆண்டுகளில் எதை செய்யக்கூடாது என்பதை எல்லாம் கற்றுக் கொண்டோம். எதை யாரும் செய்யாமல் மறந்து விட்டார்கள் என்பதையும் கற்றுக் கொண்டோம்.
கோவையில் மீண்டும் போட்டியா என்ற கேள்விக்கு, கோவையில் சுமார் 90 ஆயிரம் பேர் ஓட்டுப் போடவில்லை. அது கமல்ஹாசனின் தோல்வி அல்ல ஜனநாயகத்தின் தோல்வி. கோவையில் மீண்டும் போட்டியிடுவது என்பது கூட்டணியோடு ஆலோசனை செய்துவிட்டு முடிவெடுக்க வேண்டிய விஷயம்.
கூட்டணி அமைத்தால் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, இதுவும் முடிவு எடுக்கப்படும். டார்ச் லைட் எங்களுக்கு கிடைத்ததற்கு நன்றி சொல்ல வேண்டும். ஒரு சின்ன கட்சி என்று பெரிதுபடுத்தாமல், நேர்மையை மனதில் கொண்டு எங்களுக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கியுள்ளார்கள். இதுவரை எந்த தேர்தல் பத்திரத்திலும் கையெழுத்திட்டு நான் வாங்கவில்லை. அடுத்த படத்தில் ஒப்பந்தம் செய்கிறேன் பத்திரம் கொடுங்கள் என்றால், ரூ.10 கோடிக்கு தேர்தல் பத்திரம் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.
மேலும் கமல்ஹாசன் தனது சமூக வலைதளப்பக்கத்தில், "மக்கள் நீதி மய்யம் இன்று ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கட்சி ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே இருபெரும் தேர்தல்களை எதிர்கொண்டோம். பண பலமோ, ஊடக பலமோ, முன் அனுபவமோ சிறிதும் இன்றி மக்களைச் சந்தித்தோம். கவனம் ஈர்க்கும் வகையில் வாக்குகளைப் பெற்றோம். மக்களுக்கு அவர்களுடைய கடமையை நினைவுறுத்துவதும், தலைமைக்குத் தயார்படுத்துவதும் தேர்தல் வெற்றிகளை விட முக்கியமானது.
ஜனநாயகத் தேரை நாம் அனைவருமே சேர்ந்துதான் இழுக்கவேண்டும் என்கிற உணர்வை ஊட்டுவதே அவசியம் மிக்க அரசியல் செயல்பாடு. மக்கள் நீதி மய்யத்தைப் போன்ற ஜனநாயக சக்திகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. சாதி மதச் சழக்குகள் இருக்கும்வரை, வடக்கு தெற்கு பேதம் வாழும் வரை, ஊழலும் சீர்கேடுகளும் தொடரும் வரை நமது போராட்ட செயல்பாடுகள் ஓயாது. உயர்த்திய கொடிகள் தாழாது" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம்.. நடிகர் கார்த்திக் ரசிகர்கள் எதிர்ப்பு..!