தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"4 வருசமா பட வாய்ப்பு இல்ல" - ஹிப் ஹாப் தமிழா வருத்தம்! - PT sir movie

PT SIR: இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், நடிகர் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகி உள்ள பி.டி.சார் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில், 4 வருட இடைவேளைக்குப் பிறகு இசையமைப்பாளராக மட்டும் களமிறங்கிய 'அரண்மனை 4' படத்திற்கு எல்லோரும் வரவேற்பைத் தந்தீர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

PT SIR படக்குழு
PT SIR படக்குழு (photo credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 17, 2024, 6:01 PM IST

சென்னை: இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், நடிகர் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகி உள்ள புதிய திரைப்படம் 'பி.டி.சார்'. இதை வேல்ஸ் ஃப்லிம் இன்டர்நேஷனல் சார்பில், டாக்டர். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இப்படம், மே 24ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இது, ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கும் 25வது படமாகும். இதனைக் கொண்டாடும் விதமாக, படக்குழுவினர் கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

இதில், பேசிய நடிகை மதுவந்தி, "இந்தப்படத்தில் நடிக்க முக்கிய காரணம் கார்த்திக் தான். நான் நடிப்பேனா? என ஒரு வதந்தியே திரையுலகில் இருக்கிறது அதைத்தாண்டி நான் தான் வேண்டுமென, என்னை நடிக்க வைத்த இயக்குநர் மற்றும் படக்குழுவிற்கு நன்றி.

இந்த குழுவினர் அர்ப்பணிப்புடன் கச்சிதமாக பணியாற்றினார்கள். எனக்கு நெகடிவ் சேட் உள்ள பாத்திரம், அதைச் செய்வது எனக்குச் சவாலாக இருந்தது. இயக்குநர் கார்த்திக் மிக அழகாகப் படத்தை எடுத்துள்ளார். இந்த குழுவிற்கு முழு சுதந்திரம் தந்த, தயாரிப்பாளருக்கு என் நன்றிகள். ஆதிக்கு இசையமைப்பாளராக இது 25வது படம், வாழ்த்துக்கள். இப்படம் அருமையான ஃபேமிலி எண்டர்டெயினர் படமாக உள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி" என்றார்.

நடிகை அனிகா சுரேந்திரன் பேசியதாவது,"நீங்கள் தரும் ஆதரவுக்கு நன்றி. இந்த கதாபாத்திரம் தந்த இயக்குநர் கார்த்திக்கு நன்றி. தயாரிப்பு தரப்பினருக்கும் என் நன்றிகள். மிக வித்தியாசமான கதாபாத்திரம், உங்களுக்குள் பாதிப்பை ஏற்படுத்தும் பாத்திரம், உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி".

இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் பேசியதாவது, "ஆதிக்கு என் முதல் நன்றி. கதை சொன்ன உடனே பண்ணலாம் என்று சொன்னார். அவரால் தான் இந்தப்படம் ஆரம்பித்தது. அடுத்ததாகத் தயாரிப்பாளர் கிடைத்தது வரம். தயாரிப்பாளருக்கு என் நன்றிகள்.

இந்தப்படம் மிக மிக ஜாலியான படம். மிகப்பெரிய நட்சத்திரக்கூட்டம் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். காஷ்மீரா ஒரு அழகான ரோல் செய்துள்ளார். அனிகாவிற்கு அனைவரும் பேசும் ஒரு ரோலாக இது இருக்கும். சமீபத்தில் திரையரங்கிற்குக் கூட்டம் வரவில்லை எனும் வருத்தம் இருந்தது. ஆனால் கில்லியை அனைவரும் குடும்பத்தோடு கொண்டாடினார்கள். இந்தப்படம் குடும்பத்தோடு அனைவரும் கொண்டாடும் ஒரு படமாக, சந்தோசமான படமாக இருக்கும். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி" என தெரிவித்தார்.

தயாரிப்பாளர் ஐசரி K கணேஷ் பேசியதாவது, "வேல்ஸ் ஃப்லிம்ஸில் ஒரு நல்ல படம் எடுத்த திருப்தி இந்தப்படம் மூலம் கிடைத்துள்ளது. இயக்குநரையும், ஆதியையும் படம் பார்த்தவுடன் கூப்பிட்டுப் பாராட்டினேன். இடைவேளை வரை ஜாலியாக இருக்கும்.

இறுதியில் மிக முக்கியமான விசயத்தைத் தைரியமாகச் செய்துள்ளார்கள். எல்லா பள்ளிகளிலும் பிடி சாருக்கும், டீச்சருக்கும் காதல் என வதந்தி இருக்கும். நான் படித்த பள்ளியிலும் இருந்தது. அந்த ஞாபகங்களை இந்தப்படம் மீண்டும் கொண்டு வந்தது.

பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர். அனைவரும் அருமையாக நடித்துள்ளனர். வரும் 24 ஆம் தேதி இப்படத்தைத் திரைக்குக் கொண்டு வரவுள்ளோம். படம் பார்த்து உண்மையை எழுதுங்கள் அந்தளவு படம் நன்றாக உள்ளது.

ஆதி தான் இந்தப்படத்தின் கதையைக் கொண்டு வந்தார். கார்த்திக் இப்படி ஒரு படம் செய்வார் என நினைக்கவில்லை. அவரை அடுத்த படத்திற்கும் புக் செய்து விட்டேன். அடுத்த படமும் எங்களுக்குத் தான் செய்கிறார். ஆதி இசையமைப்பாளராக அரண்மனை 4இல் கலக்கியிருக்கிறார். அதே போல் பி.டி.சாரிலும் கலக்கியிருப்பார். உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக இப்படம் பிடிக்கும் நன்றி" என தெரிவித்தார்.

நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி பேசியதாவது,"எனக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள். 4 வருட இடைவேளைக்குப் பிறகு இசையமைப்பாளராக மட்டும் களமிறங்கிய 'அரண்மனை 4' படத்திற்கு எல்லோரும் பெரும் பாராட்டுக்களைத் தந்தீர்கள். மிக்க மகிழ்ச்சி. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

இந்தப்படத்தின் குட்டி பிசாசே என்கின்ற பாடல் பெரிய வரவேற்பைக் குவித்து வருகிறது. ஒரு ஆடியன்ஸாக அட்டகாசமான முதல் பாதி, எமோஷலான இரண்டாம் பாதி, நல்லதொரு க்ளைமாக்ஸ் என உங்களை முழுக்க திருப்திப்படுத்தும் படமாக இருக்கும். இப்படி ஒரு கதையை எடுத்த கார்த்திக்கிற்கு என் நன்றிகள்.

தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தக்கதையை முதலில் ஒப்புக்கொள்வார் என நினைக்கவே இல்லை. ஆனால் இந்தக்கருத்தை நாம் தான் சொல்ல வேண்டுமெனச் சொன்னார். அவர் எப்படியான படங்கள் வேண்டுமானாலும் செய்திருக்க முடியும் ஆனால் இப்படம் செய்ததற்கு நன்றி. அவருடன் பயணித்தது மிகப்பெரும் அனுபவமாக இருந்தது.

எனக்கு நிறைய விசயங்கள் சொல்லித் தந்தார். ஒரு குடும்பத்தில் இருப்பது போல் உணர்ந்தேன். பி.டி.சார் படம் மிக நிறைவான படமாக இருந்தது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர். என் மேல் நம்பிக்கை வைத்து இப்படி ஒரு பிரம்மாண்ட படத்தைத் தயாரித்த தயாரிப்பாளருக்கு நன்றி. குடும்பத்தோடு வந்து பாருங்கள் கண்டிப்பாகக் கொண்டாடுவீர்கள் அனைவருக்கும் நன்றி" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:நடிகர் சிம்புவுடன் என்ன பிரச்சனை? உண்மை உடைத்த ஐசரி கணேஷ்! - Isari Ganesh Vs Simbu

ABOUT THE AUTHOR

...view details