சென்னை: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய். இவருடைய படங்கள் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று வருகிறது. அந்த வகையில், விஜய் தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'கோட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில், இயக்குநர் தரணி இயக்கத்தில் விஜய் நடித்து, கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. இது ரீமேக் படமாக இருந்தாலும், பிரமாண்ட வெற்றியைப் பெற்றது என்றே கூறலாம். விஜயின் சினிமா வாழ்வில், மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக இது பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், 'கில்லி' படம் மீண்டும் புதுப்பொலிவுடன் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு, உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இப்படத்தை சக்தி பிலிம்ஸ் பேக்டரி நிறுவனம் சார்பில், சக்திவேலன் வெளியிட்டுள்ளார். கில்லி படம் இதுவரை கிட்டத்தட்ட ரூ.10 கோடிக்கும் மேல் வசூல் செய்து உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் மற்றும் விநியோகஸ்தர் சக்திவேலன் இருவரும் விஜயைச் சந்தித்து படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சக்திவேலன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் வெளியிட்டுள்ளார்.
அதில், "கில்லி திரைப்பட மறு வெளியீட்டில் ரசிகர்களோடு திரையரங்கில் அப்படத்தைப் பார்த்த பொழுது அவர்களின் கொண்டாட்டம் எனக்கு வியாபாரம் தாண்டிய ஒரு திரைப்பட ரசிகனாக சிலிர்ப்பைத் தந்தது. விஜயை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்த பொழுது, திரைத்துறை நலம் விரும்பியாக நீங்கள் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று அவரிடம் என் விருப்பத்தைத் தெரிவித்தேன்" என அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில், நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு செயல்படப் போவதாகவும், இருக்கின்ற படங்களை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்தார்.
இதையும் படிங்க:மே தினத்தில் ரீ ரிலீஸ் ஆகும் பில்லா.. கில்லியைத் தொடர்ந்து அஜித் ரசிகர்களுக்கு திரை விருந்து! - Billa Movie Re Release