சென்னை: இயக்குநர் ஷங்கர் ரஜினியின் பயோபிக் எடுக்க ஆசைப்பவதாக தெரிவித்துள்ளார். வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தில் ராஜூ தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’ (Game changer). தமன் இசையமைத்துள்ள ’கேம் சேஞ்சர்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (ஜன.10) வெளியாகிறது.
தமிழில் பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ள இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். கேம் சேஞ்சர் படத்தின் ரா மச்சா மச்சா, DHOP ஆகிய பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் கேம் சேஞ்சர் பட புரமோஷனில் இயக்குநர் ஷங்கர் ’இந்தியன் 2’ விமர்சனங்கள் குறித்தும், தனது எதிர்கால திரைப்படங்கள் குறித்தும் பேசியுள்ளார். கேம் சேஞ்சர் குறித்து ஷங்கர் பேசுகையில், “கரோனா காலத்தில் இந்தியன் 2,3 ஆகிய கதைகளை வைத்திருந்தேன். மேலும் வேள்பாரி கதையை படித்து, அதற்கு திரைக்கதை எழுதி வைத்திருந்தேன்.
கரோனா காலத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர் கேம் சேஞ்சர் கதையை கூறினார். எனக்கு கில்லி, தூள், தில் போன்ற கமர்ஷியல் படங்கள் பிடிக்கும். அந்த வகையில் கேம் சேஞ்சர் படத்தை மாஸ் மசாலா கமர்ஷியல் படமாக உருவாக்கியுள்ளேன்” என்றார்.