சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள வாழை திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனைக் கொண்டாடும் விதமாக, சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகை திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாரிசெல்வராஜ், "இந்த படம் திரைக்கு வருமா? வராதா? என்று நினைத்து பார்க்கவில்லை. ஆனால், இந்த கதையை படமாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு எடுத்த படம் வாழை. சின்ன படம், பெரிய படம் என்று பார்க்காமல் கதை நன்றாக இருந்தால் கொண்டாடப்படும் என்பதற்கு உதாரணமாக வாழை அமைந்துள்ளது. வாழையை தன் சொந்தக் கதையாக மாற்றிக் கொண்ட அனைவருக்கும் படக்குழுவின் சார்பாக நன்றி.
பரியேறும் பெருமாள் படம் திரைக்கு வந்து பத்து நாட்கள் கழித்து இயக்குநர் பாலா போன் செய்தார். அலுவலகத்திற்கு வர முடியுமா என கேட்டார். நானும் சென்றேன். பேசிக்கொண்டே இருந்தார். திடீரென 5 பவுன் செயினை எடுத்து போட்டு விட்டார். அந்த அறையில் யாருமே கிடையாது. நானும் அவர் மட்டும்தான் இருந்தோம். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. யாரிடமும் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனக்கு செய்ய வேண்டும் என தோன்றியதோ அதைச் செய்தேன் என்று கூறினார்.
அதன்பிறகு எங்காவது பார்த்தால் மட்டும் பேசிக்கொள்வதுண்டு. அதேபோல தான் வாழை படம் பார்த்துவிட்டு அந்த முத்தம், அரவணைப்பு எல்லாமே இயல்பாக நடந்தது. அந்த முத்தத்திற்கும், மௌனத்திற்கும் இடையே நிறைய வார்த்தைகள் உள்ளது என தெரிவித்தார்.
பஞ்சுமிட்டாய் பாடல் தொடர்பான கேள்விக்கு, அந்த பாடலுக்கு தான் டான்ஸ் ஆடினேன். அந்த பாடல் எனக்கு மிகவும் நெருக்கமான பாடல். மற்றவர்களுக்கு கேட்கும் பொழுது வெறும் பாடலாக தெரிகிறது. ஆனால், என் வாழ்க்கையில் அந்த பாடல் பிணைந்துள்ளது. பஞ்சுமிட்டாய் பாடல் என் வாழ்க்கையில் முக்கியமான பாடல்.