சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டும் பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட விலைவாசி உயர்வின் காரணமாக நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும், இதனால் கட்டடப் பணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக நடிகர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே 40 கோடி ரூபாய்க்கு கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், மேலும் 25 கோடி ரூபாய் கட்டுமானப் பணிகளுக்கு தேவைப்பட்டது. அதற்கு நடிகர் சங்கம் சார்பில் வங்கிக் கடன் பெறுவதற்கு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. 12.5 கோடி ரூபாய்க்கு வைப்புத்தொகை காட்டினால், வங்கி 30 கோடி ரூபாய் கடனாக தரத் தயாராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், அதற்காக நடிகர் சங்கம் சார்பில் நிதி வசூலிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில், இதுவரை உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன், நடிகர் விஜய் உள்ளிட்டோர் நிதி வழங்கியுள்ளனர். ஆனாலும், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்டும் பணியில் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டுள்ளது.
மேலும், நிதி இல்லாமல் கட்டடப் பணி தாமதமாகி வரும் நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், பொருளாளர் கார்த்தி உள்ளிட்டோர் நடிகர் கமல்ஹாசனைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.